கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொடிய ஜிகா வைரஸ் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு, சிக்கன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை போலவே இந்த வைரஸ் கிருமிகளும் கொசுக்கள் மூலமே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது பிரேசிலில் வெகுவேகமாக அந்த நோய் பரவி வருவதாகவும் கனடாவை தவிர அமெரிக்க கண்டத்தில் அனைத்து நாடுகளிலும் இந்த கிருமியின் பாதிப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததுடன், இது எப்படி பரவுகிறது என்பதும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதை அடுத்து 2018-ம் ஆண்டு வரையில் பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் என்று தென் அமெரிக்க நாடுகள் அறிவுரை வழங்கி உள்ளது. இதேபோன்று, ஜமைக்கா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளிலும் பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜிகா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்துகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து விரைவாக கண்டுபிடிக்குமாறும், அதற்குரிய நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படியும் அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.