நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிவோர் நேர்மையைக் கடைப்பிடிப்பதனாலேயே அந்த நாடு இன்று கூட்டுறவுத்துறையில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று மாலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை தொடர்பான கேள்வியொன்றை எட்வேட் குணவர்த்தன எம்.பி பாராளுமன்றத்தில் எழுப்பிய போது அமைச்சர் றிஷாட் அதற்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார். தனது அமைச்சின் கீழே தேசிய ரீதியில் 54 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளதாகக் கூறிய அமைச்சர் இந்த சங்கங்களை உயிர்ப்புள்ளதாக, துடிப்புள்ளதாக இயங்கச் செய்வதற்கான பல்வேறு திட்டங்களை தாம் வகுத்துள்ளதாகவும்; பிரதியமைச்சர் சம்பிக்க பிரேமதாச அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் கூட்டுறவுத் துறையை செயற்திறன் உள்ளதாக மாற்ற தமது பங்களிப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கூட்டுறவுத் துறையில் ஊழல்கள் புரிவோர், நேர்மையற்ற வேலைகளைச் செய்வோர் தண்டிக்கப்படவேண்டிய வகையில் சில நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை சார்ந்த சபைகளில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் பின்புலன்களில் தொங்கிக் கொண்டும் அல்லது அரசியலில்வாதிகளுடன் நேரடித் தொடர்புகளை வைத்துக் கொண்டும் இருந்ததனால் இந்தத் துறையில் ஊழல்களும் சீர் கேடுகளும் மலிந்தன. அத்துடன் இவர்கள் கூட்டுறவுத் துறையை நாசமாக்கினர். இவ்வாறான பிழையான நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த துறையை முன்னேற்றுவதற்கு தமது பங்களிப்பை நல்க வேண்டும் என நான் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு சில கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் சீர்கேடுகள் பற்றி இங்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அவை மேல்மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் வருவதனால் உரிய மாகாண அமைச்சருடன் தொடர்பு கொண்டு அக்குறைபாடுகளை நிவர்த்திக்க முயற்சிப்பேன் என்றும் அமைச்சர் றிஷாட் உறுதியளித்தார்.