பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றதாக அமைச்சரது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, சிறுபான்மையினர் தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இன்று மாலை 3 மணிக்கு பிரதமர் தலைமையில் தாம் உட்பட கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வியமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்காக கடிதம் அனுப்பபட்டுள்ள ஆயிரத்து 688 பேருக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனம் நாளை வழங்கப்படவுள்ளது.
எஞ்சிய ஆயிரத்து 333 பேருக்கான நியமனம், நேர்முக தேர்வின் போது அவர்கள் உரிய ஆவணங்களை சமர்பிக்காததன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களுக்கு மீண்டும் ஒரு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.