பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கெவின் பீட்டர்சனின் அவார ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. கெவின் பீட்டர்சன் 39 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்தார்.
பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணியின் கவாஜா, கல்லிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கல்லிஸ் 27 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும், கவாஜா மட்டும் அதிரடியாக விளையாடி 40 பந்தில் 70 ரன்கள் குவித்தார்.
இறுதிக்கட்டத்தில் வந்த பிளிசார்டு 7 பந்தில் 16 ரன்களும், ரோரர் அவுட்டாகாமல் 13 ரன்களும் எடுக்க சிட்னி தண்டர் அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சிட்னி தண்டர் முதல் பிக் பாஷ் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசிக்கு இதுதான் கடைசி போட்டி. இதில் கோப்பையை வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.