இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு !

india-pak_20

இந்தியா-பாகிஸ்தான் இடையே வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கடந்த 15-ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சுவார்த்தையை நடத்த இயலும் என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்தது. 

ஆனால், பதன்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசார் மீதோ, அவருடைய அமைப்பினர் மீதோ பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் இஸ்லாமாபாத்தில் கூறும்போது, ‘‘பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டிய பிரச்சினைகள் மற்றும் பேச்சுவார்த்தைக்கான தேதி ஆகியவை பற்றி இரு தரப்பினரும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதில் ஒரு மித்த கருத்து ஏற்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இரு நாடுகள் இடையேயும் வெளியுறவு செயலாளர் அளவிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம்(பிப்ரவரி) நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.