நிஸ்மி அக்கரைப்பற்று
ஜனநாயகத்தின் பாதுகாவலனாகத் திகழ்பவன் ஊடகவியலாளன். ஊடகவியலாளருக்கு உதவுவது எமது கடமை. நான் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த உதவிகளை செய்து வருவது யாவரும் அறிந்தவிடயம் என விவசாய அமைச்சரின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளரும்,அம்பாறை மாவட்டஅசர சார்பற்ற நிறுவனங்களின் தவிசாளரும்,பிரபல சமூக சேவையாளருமான எஸ்.லாபீர் தெரிவித்தார்.
சிலோன் முஸ்லிம் பத்திரிகையை உத்தியோகபூர்வமாக வெளியிடுவது தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (24) இரவு அக்கரைப்பற்று ரீ.எப்.சீ.ஹோட்டலில் சிலோன் முஸ்லிம் பத்திரிகையின் ஏற்பாட்டாளர் பஹத் ஏ மஜீத் தலைமையில் நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம விருந்துனராக கலந்து கொண்டு உரையாற்றும் போதேஎஸ்.லாபீர் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்
ஊடகவியலாளர்களை நான் எப்போதும் நன்கு மதித்து நடப்பவன் என்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு என்னால் முடிந்தவைகளை செய்து வருகின்றேன்.இப் புதிய பத்திரிகையின் ஆரம்ப வளர்ச்சிக்காக நீங்கள் அனைவரும் முடிந்தவரை பங்களிப்புகளை வழங்க வேண்டும்.
கூட்டுப் பொறுப்பின் ஊடாக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் எப்போதும் வெற்றியைத் தரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் மீரா எஸ் இஸ்ஸடீன் என்னிடம் கோரிக்கை கடிதம் தருமிடத்து ஊடக அமைச்சரை எனது முழுச் செலவில் இப்பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் .
இதன் போது எஸ்.லாபீரினால் அவரது சொந்த நிதி 45 ஆயிரம் ரூபா பணத்தினை சிலோன் முஸ்லிம் நிறுவனத்தின் தலைவர் பஹத் ஏ மஜீதிடம் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் பிரபல சமூக சேவையாளர் எஸ்.லாபீரின் சேவையினைப் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இதில் பிறை எப் எம் கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல்கையூம்,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூணம் மீரா எஸ் இஸ்ஸடீன் உட்பட ஊடகவியலாளர்கள் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்கள்,பிரமுகர்கள் அனைவருக்கும் எஸ்.லாபீரினால் பரிசுப் பொருட்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.