ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ. ஆர். ஏ ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு, முன்னாள் துணை அமைச்சர் எம். எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான தேர்தல் கூட்டு உடன்படிக்கையின்படி ஐ. தே. கட்சியினால் இரு தேசிய பட்டியல் பாராளுமன்ற இடங்கள் ஶ்ரீ ல. மு. காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அப்போது கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் நிலவின.
கட்சியின் பொதுச்செயலாளரான ஹசன் அலி மற்றும் முன்னாள் அமைச்சரான சேகு பசீர் தாவூத் ஆகியோருக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரமாக காணப்பட்டது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவுப் ஹக்கீம் கட்சி தலைவர் என்ற ரீதியில் தனக்குரிய அதிகாரத்தின் பேரில் இறுதி நேரத்தில் அவரது சகோதரரான ஏ. ஆர். ஏ ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி எம். எச். எம். சல்மான் ஆகியோரை அப்போது பரிந்துரை செய்திருந்தார்.
தற்காலிக நடவடிக்கையாக தனது அதிகாரத்தின் கீழ் எந்த நேரத்திலும் பதவி விலகக் கூடியவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற அடிப்படையிலும்தான் இருவரையும் அவர் நியமித்திருந்தாக அவ்வேளை கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள எம். எஸ். தௌபீக் எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றம் கூடும் போது பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே இந்தப் பதவி இப்போது தௌபீக்கு கொடுக்கப்பட்டமை குறித்தும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன என, பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.