மாடறுப்புக்கெதிராக அரங்கேறும் திரைப்படம்..!

 

முஸ்லிம் பெண்களில் அதிகமானோர் தனது உடற்பாகங்களை இயன்றளவு மறைத்துக்கொள்வார்கள்.இவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் சிறு வயதிலிருந்தே இவ் ஆடைக்கலாச்சாரத்தை பின்பற்றுவதன் காரணமாக ஏனைய மதத்தைச் சார்ந்த பெண்கள் பின்பற்றும் ஆடைக்கலாச்சாரத்தைக் கண்ணுறும் போது முகம் சுழித்துக் கொள்வார்கள்.குறித்த மாற்று மதத்தைச் சார்ந்த பெண்களுக்கு அது சிறு வயதிலிருந்து பழக்கப்பட்ட ஒன்று என்பதால் அவ் ஆடைக்கலாச்சாரத்தில் எதுவித தவறையும் உணர மாட்டார்கள்.உடலை பூரணமாக மறைக்கும் முஸ்லிம் பெண்களைப் பார்த்து சாக்கு மூட்டை அப்படி இப்படி என்று எள்ளி நகையாடுவார்கள்.இச் சம்பவமானது மனிதன் வளர்க்கப்படும் விதம் குறித்த சில விடயங்களில் எது சரி? எது பிழை? என அவனால் தீர்மானிக்க முடியாத நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.இவ்வாறான விடயங்களை சரியான விதத்தில் ஆராய்வதன் மூலம் மாத்திரமே தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம்.சிங்களவர்கள் மாடு அறுப்பதை மிருகவதை என தனது உள்ளத்தில் சிறு வயதிலிருந்தே பதித்து வைத்துள்ளதன் காரணமாகவே எவ்வளவு தெளிவுபடுத்தியும் அதனை ஏற்க அவர்களது உள்ளம் தயங்குகிறது.

 

இலங்கையில் அவ்வப்போது இப் பிரச்சினை தலை எடுப்பது வழமை.இதனைக் கிளறி எழும் சல சலப்புக்களை பார்த்து பேரினவாதிகள் மகிழ்ந்து கொள்வார்கள்.இவ் விடயத்தில் பொது பல சேனா,சிங்கள ராவய,ராவண பலய போன்ற அமைப்புக்கள் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வருடங்கள் முன்பு  சூரியவெள தர்மதுர்க்க ஆச்சிரமத்தின் தம்பதெனிய தம்மதின்ன தேரர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் தீக்குளிக்கும் நோக்கில் பெற்றோல் பாத்திரத்துடன் மிகவும் ஆக்ரோசமாக இருந்த நிலையில் கைது செய்யயப்பட்டிருந்தார்.மிருக வதையைக் கண்டித்து தலதா மாளிகை முன்பு இந்திரத்ன தேரர் என்பவர் தீக்குளித்தும் உள்ளார்.மத்துகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மடறுப்பதை தடை செய்யக் கோரி பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தது.இந்த பிரேரணையை மத்துகம பிரதேச சபையின் முதுகெலும்புள்ள தலைவர் என்ற வகையில் ஆட்சேபித்து நிராகரிப்பதாக கலைக்கப்பட்ட மத்துகம பிரதேச சபையின் தலைவர் எல்.ஜீ லியன ஆராய்ச்சி கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.முஸ்லிம் உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தடைவிதிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.இறைச்சிக் கடைகள் எரிக்கப்படுதல்,இறைச்சி ஏற்றி வந்த லொறியை பற்ற வைத்தல் போன்ற பல சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன.இதுவெல்லாம் மஹிந்த ராஜ பக்ஸ ஆட்சியில் பதிவாகிய வரலாறுகளாகும்.எனினும்,முஸ்லிம்களின் எதிரிகளில் ஒருவராக சித்தரிக்கப்பட்டு முஸ்லிம்களால் தூக்கி எறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ மாடுகள் அறுப்பதை தடை செய்ய உள்ளதாக பகிரங்கமாக கூறிய வரலாறுகள் நான் அறிந்த வரை இல்லை.

 

தற்போது உதயமாகியுள்ள இவ் அரசில் இச் சம்பவங்களை தூக்கிப் பிடிக்கும் அமைப்புக்கள் உறங்கிக்கிடப்பதால் இப் பிரச்சினை பெரிய பேசு பொருளாக இருக்கவில்லை.கடந்த 2016-01-16ம் திகதி களுத்துறை பயாகலை இந்து கல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி மாடறுப்பு விடயத்தை மீளக் கிளறி சந்தைக்கு கொண்டுவரும் வேலையைச் செய்துள்ளார்.அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சில பேரின ஊடகங்கள் திறம்படச் செய்துள்ளன என்றே கூற வேண்டும்.லைக் பசிக்கும் ஊடக பிரபலத்திற்கும் இது பற்றி திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் அதிகமான இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்ததை அவதானிக்க முடிந்தது.ஒரு ஜனாதிபதியின் சிறு கருத்து அக் குறித்த நாட்டில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.வில்பத்து தொடர்பாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதியின் இக் கருத்து குறித்து ராவண பலய அமைப்பு ஒரு கொள்கை விளக்க மாநாட்டையே நடாத்தியுள்ளது.நாளை பொது பல சேனா இதைத்தானே நாங்களும் கேட்டோம் என தங்கள் தரப்பை நியாயப்படுத்த முயலும்.இது முஸ்லிம் சமூகத்திற்கான சிறந்த சமிஞ்சைகள் அல்ல.மாறாக எச்சரிக்கை முன்னொலியாகவே கணிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி பேசிய இடம் இந்துக் கல்லூரி என்பதால் இந்துக்களை தன் பக்கம் ஈர்க்கும் ஒரு உத்தியாகவே இக் கருத்தை பார்க்க முடிகிறது.வடக்கு,கிழக்கு தமிழர்களிடம் சென்றால் ஏதாவது தீர்வைத் தருவாகக் கூறி மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கலாம்.மலையகத் தமிழர்களிடம் சென்றாலும் ஏதாவது கூறலாம்.களுத்துறை இந்துக்களிடம் இப்படி ஏதாவது சொன்னால் தான் ஜனாதிபதியின் மீது மக்களுக்கு நல்லெண்ணம் மேலெழும்.தைப்பொங்கலானது பசுவினை மையப்படுத்தி செய்யப்படுகின்ற ஒரு பண்டிகையாதலால் பசுக்கள் பற்றி ஏதாவது சிறப்பாக சொல்லுவதும் அவ்விடத்தில் பொருத்தமானதாகும்.பசுவை இந்து மதத்தின் புனிதப்பொருள் என்ற ரீதியில் முடிச்சுப் போட்டு மத நல்லுறவைக் காராணம் காட்டி தான் மாட்டிறைச்சியை தடை செய்ய முயன்றதற்கு அவ்விடத்தில் ஜனாதிபதி மைத்திரி நியாயம் கற்பித்தும் உள்ளார்.இந்துக்களின் புனிதப்பொருள் என்பதால் பொதுவாக மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை.பசு மாட்டிறைச்சியை மாத்திரம் தடை செய்தாலே போதுமானதாகும்.இதிலிருந்து இவர் புனிதப்பொருள் என்பதால் தான் மாட்டிறைச்சியை தடை செய்ய எத்தனித்தார் என்ற நியாயத்தை ஏற்க முடியாது.மேலும்,தானும் இறைச்சி உண்பதில்லை எனக் கூறி நானும்,நீங்களும் இவ் விடயத்தில் ஒரே கொள்கையில் உள்ளோம் என நிறுவவும் முயற்சித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரி இறைச்சி உண்ணாமல் இருப்பதற்கும்,தமிழர்கள் பசுமாட்டிறைச்சி உண்ணாமல் தவிர்ப்பதற்குமிடையில் கொள்கையளவில் பாரிய வேறு பாடு உள்ளது.

ஜனாதிபதி மைத்திரி மடறுப்புக்கு எதிரானவர்,பொலன்னறுவையில் இருந்து அறுவைக்குச் செல்லும் மாடுகளை இவர் தடுத்திருந்தார் என்பதான கதைகள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வெளிவந்திருந்தன.அதனை உறுதிப்படுத்தும் வகையில் இச் செயல் அமைகிறது.நூறு நாள் வேலைத் திட்டத்தின் 87வது ஷரத்திலும் மிருக வதையைத் தடுத்தல் என்ற விடயம் கூறப்பட்டிருந்தது.இதுவும் அந் நேரத்தில் ஒரு சிறிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.இது பொதுவான மிருகவதை என பலராலும் நியாயம் கற்பிக்கப்பட்டு முஸ்லிம்களிடத்தில் பூதாகரமாக்கப்படாது தடுக்கப்பட்டிருந்தது.ஜனாதிபதியின் இக் கூற்றை வைத்து சிந்திக்கும் போது மடறுப்பை மையப்படுத்தியே இவ் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.மாடு வரும் முன் மணியோசை வந்துதான் உள்ளது.எனினும்,நாம் தான் அதனை செவியுறாமல் இருந்துள்ளோம்.மாடறுப்பு விடயம் ஏற்கவே பல சர்ச்சைகளுடன் உள்ள போது ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு இவ்விடத்தில் கூறியது அவசியம் தானா? இவ் விடயம் பற்றி தமிழர்களிடமோ அல்லது சிங்களவர்களிடமோ கூறினால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.முஸ்லிம்களிடம் சொன்னால் மாத்திரமே கிளர்ந்தெழுவார்கள்.இவ் விடயத்தில் தெளிவை உண்டு பண்ணும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரி கதைத்திரிந்தாலும் அதனை முஸ்லிம்களிடத்தில் கதைத்திருப்பதே பொருத்தமானதாகும்.இதனை வைத்து பார்க்கும் போது ஜனாதிபதி மைத்திரி பாம்பிற்கு வாலையும் மீனிற்கு தலையையும் காட்டுகிறாரா என்ற அச்சம் எழுகிறது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரின் தற்கால சில செயற்பாடுகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இவ் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களுடன் எதுவித கலந்துரையாடலுமின்றி முடிவு எடுத்துள்ளமையை ஒரு போதும் ஏற்க முடியாது.உழ்கிய்யா,அகீக போன்ற இஸ்லாமிய கடமைகளில் இக் குறித்த விடயம் தாக்கம் செலுத்தும் என்பதை இலங்கையில் உள்ள அனைவரும் அறிவர்.உழ்கிய்யா கடமையை நிறைவேற்ற கட்டிவைக்கப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்தல்,ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு மாடுகளை கொண்டு செல்ல தடைகளை ஏற்படுத்தல் போன்றவற்றின் போது கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகள் குறித்த இஸ்லாமியக் கடமைகளுக்கு மாடுகள் அறுக்க வேண்டி உள்ளதை இலங்கையில் உள்ள அனைவருக்கும் அறியச் செய்திருந்தது.2010ம் ஆண்டு காலப்பகுதியில் மேர்வின் சில்வா குர்பான் கொடுப்பதற்காக வத்தளைப் பகுதியில் கொண்டுவரப்பட்டிருந்த எழுபதிற்கும் மேற்பட்ட மாடுகளை அபகரித்துச் சென்ற விடயம் பாரிய சர்ச்சையையும் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்படி இருக்க ஜனாதிபதி மைத்திரி தனக்கு இஸ்லாமிய கடமைகளுக்கு மாடு அறுப்பதன் அவசியம் பற்றித் தெரியாது எனக் கூறியும்  தப்பித்துக் கொள்ள முடியாது.இது ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களை தெளிவாக புறக்கணித்துள்ளமையை எடுத்துக்காட்டுகிறது.

மாடுகளை அறுத்தல் மிருகவதை என்ற வாதத்திற்கு பல நியாயமான எதிர் வாதங்களை முன் வைக்கலாம்.பல இடங்களில் பல தடவைகள் இது பற்றி அலசப்பட்டுள்ளதால் இது பற்றி இன்னும் இன்னும் கதைப்பது பயனற்றது.தமிழர்களின் ஒரு வணக்கப்பொருளாக இது உள்ளதால் இதனை தவிர்க்க வேண்டுமா என்பது அலச வேண்டிய ஒரு பகுதியாகும்.தமிழ் மக்கள் ஒரு வணக்கத்திற்குரிய ஒன்றாக இதனை மதிக்கிறார்களா என்பதும்  கேள்வியிலேயே முற்றுப்பெறும் ஒரு விடயமாகும்.இலங்கை அரசின் செயற்பாடு காரணமாக மாடு அறுப்பது தடைப்படுமாக இருந்தால் பால் பண்ணைகள்,தமிழர்கள் வீடுகள் தவிர்ந்து வேறு எங்கும் மாடுகள் வளர்க்கப்படாது.தமிழர்களின் வீடுகளில் கூட பசுக்கள் மாத்திரமே வளர்க்கப்படும்.பசு விடயத்தில் மாத்திரமே தமிழர்கள் கவனம் செலுத்துவதால் பிறக்கும் காளை மாடுகளை இலங்கை அரசு எவ்வாறு சமாளிகுமோ தெரியவில்லை.ஏனெனில்,காளை மாடுகளில் இருந்து எதுவித பயனும் கிட்டாது.சினைப்படுத்தலுக்கு பல பசுக்களுக்கு ஒரு காளை மாடு இருந்தாலே போதுமானதாகும்.சில வேளை தெரு நாய்கள் வீதிகளில் அலைந்து திரிவது போன்று காளை மாடுகளும் அலைந்து திரியும் நிலையும் ஏற்படலாம்.காளை மாடுகள் நாய்கள் போன்று வாலை சுருட்டிக் கொண்டு அதையும் இதையும் உண்டு ஒரு சிறிய இடத்தில் வாழக்கூடிய ஒரு பிராணியுமல்ல.தற்போதே இலங்கையின் பல ஊர்களில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லைகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.குறித்த கட்டாக் காலி மாடுகளை உரிமை கொண்டாட யாராவது வந்தமையும்,உணவுக்காக பயன்படுத்தப்பட்டமையுமே அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தமைக்கான முதன்மைக் காரணமாகும்.இச் சட்டம் அமுலிற்கு வந்தால் கட்டாக் காலி மாடுகளின் தொல்லையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இக் குறித்த கட்டாக் காலி மாடுகள் விவாசாயிகளுக்கு பாரிய சவாலாக அமையும்.இதனால் விவாசாய நிலங்கள் பாழ் படுத்தப்படும்.இச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சில காலம் தொடர்ந்தால் கட்டாக் காலி மாடுகளின் தொல்லையினால் இறைச்சியை உண்ண அனுமதியுங்கள் என்ற சட்டம் இயற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இந் நிலைமை மேலும் தொடர்ந்தால் போதியளவு உணவு இல்லாததன் காரணமாக குறித்த மாடுகள் பட்டினிச் சாவை மனிதர்களின் கண் முன்னே எதிர் கொள்ளும்.இது ஒரு மன வேதனைக்குரிய விடயமும் கூட.

தமிழர்களும் தங்களது வீடுகளிலே பட்டிக் கணக்கில் பசுக்களை வளர்ப்பதில்லை.ஒரு வீட்டில் ஒன்று அல்லது இரண்டு என்றே வளர்ப்பார்கள்.அதுவும் தமிழர்களின் அனைத்து வீடுகளிலும் மாடு வளர்ப்பதாகவும் நான் அறியவில்லை.ஒரு குறித்த பகுதியில் உள்ள ஓரிரு வீடுகளில் வளர்க்கப்படுவதையே நான் இதுவரை கண்ணுற்றுள்ளேன்.இச் சட்டம் காரணமாக கட்டாக் காலி மாடுகளின் தொந்தரவு அதிகம் காணப்படும்.மேற்படி காரணங்களால் மாட்டின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு மாடு அவசியமானவர்கள் தள்ளப்படுவர்.இதற்கு பசுக்களை இயற்கையாக,செயற்கையாக சினையுறுதலை கட்டுப்படுத்துவத்தைத் தவிர வேறு வழி இல்லை.இது அதி உச்ச மிருக வதையினுள் உள்ளடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.மாடு அறுப்புத் தடையானது ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்கள் நீடித்தால் இத் தடை காரணமாக மாடு என்ற இனம் அழிவை எதிர்கொள்ளும்.தமிழர்கள் வணங்குவதற்கு கூட சில வேளை மாடுகள் கிடைக்காத நிலையும் ஏற்படலாம்.அதாவது இத் தடைகள் மூலம் மாடு என்ற இனம் பாதுகாக்கப்படப் போவதில்லை மாறாக அழியப்போகின்றது என்பதே உண்மை.

கிராமியப் பொருளாதாரத்தில் மாடு வளர்ப்பின் பங்கு அபரிதமானது.மாடு வளர்ப்பு தடைப்படும் போது கிராமியப்பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியுறும்.இவ் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கூட அரசு கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொண்டதாக அறியமுடியவில்லை.இவ்வாறான நிலையில் இதனையும் செய்தால் மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகும்.இதனால் முஸ்லிம்கள் மாத்திரம் பாதிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது.இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அநேகமான இடங்களில் அறுக்கப்படும் மாடுகள் சிங்களப் பகுதிகளான ஹம்பாந்தோட்டை,திஸ்ஸமகாராம,மகியங்கனை போன்ற சிங்கள ஊர்களில் இருந்தே கொண்டுவரப்படுகின்றன.முஸ்லிம்கள் ஓரிடத்தில் செறிந்து வாழ்வதன் காரணமாக முஸ்லிம் பகுதிகளில் மாடு வளர்ப்பதற்கு ஏதுவான சூழ் நிலை குறைவு.இதன் காரணமாக பொருளாதார ரீதியாக முஸ்லிம்களை விட கிராமத்து சிங்கள மக்களே அதிக பாதிப்புக்குள்ளாவார்கள்.

பாலிற்காக மாத்திரம் பசுக்களை வளர்க்கும் போது போதுமான அளவு இலாபங்களை அடைந்து கொள்ள முடியாது.இதன் மூலம் உள்ளூர் மாடு வளர்ப்பு முற்றாக துடைத்தெறியப்படும்.உள்ளூரில் பாலின் மூலம் தயாரிக்கப்படும் தயிர்,யோகட்,குடிபானங்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்க முடியாது.இதனை ஜீவனோபாயமாக நம்பி வாழும் பல குடும்பங்கள் தொழிலை இழக்க நேரிடும்.இப் பால் மூலம் தயாரிக்கப்படும் உள்ளூர்ப் பொருட்களை  தங்களது ஜீவனோபாய தொழிலாக கிராமத்து சிங்கள மக்களே அதிகம் செய்கின்றனர்..ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் தயிரைம்,உப்பையும் வீதியில் வைத்து விற்பனை செய்வதை பலரும் கண்ணுற்றிருப்பர்.இதுவும் சிங்கள மக்களையே பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கும்.ஏறாவூர்ப்பற்று பால் சேகரிப்பாளர் சங்க அங்கத்தவர்கள் நாளொன்றிற்கு 10000-12000 லீட்டர் வரை பால் சேகரிப்பதாக இலுப்படிச்சேனை நிலையத்தின் பொறுப்பாளர் திருமதி ரி.ரோசாந்தி அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.இலங்கையின் பால் தேவையில் உள்ளூர் பால் சேகரிக்கும் நிலையங்கள் முக்கிய வகி பாகம் வகிப்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இதன் மூலம் இலங்கையில் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.அநேகமான கிராமங்களில் பால் பவுடர்களை வாங்க வசதி இன்மை காரணமாக பசுக்களை வளர்த்து அதன் மூலம் தங்களது பால் தேவையினை நிறைவு செய்துவிட்டு அதனை இறைச்சிக்காக விற்பது நடை முறையில் இருந்து வருகிறது.இச் சட்டத்தின் நிறைவேறினால் இவ்வாறு செய்ய முடியாது.மேலும்,இறைச்சி,பசுப்பால் போன்றவற்றில் உள்ள போசாக்குகளையும் பெற்றுக்கொள்ள முடியாது போகும்.இச் சட்டம் போசாக்கற்ற ஒரு சமூகம் உருவாக வழி சமைக்கப்போகிறது என்பது மிகவும் கவலையான விடயமாகும்..

இலங்கை மக்களின் உணவுத் தேவையினை நிறைவு செய்வதில் இறைச்சி முக்கிய இடத்தில் உள்ளது.இதனை தடை செய்யும் போது ஆடு,கோழி இறைச்சிகளின் தேவையும் அதிகரிக்கும்.இன்று ஆட்டிறைச்சி யானை,குதிரை விலையாய் சந்தையில் நுகரப்படுகிறது.இப்படி இருக்கையில் ஆட்டிறைச்சி இவ் இறைச்சியின் இடத்தை நிரப்புவதில் அவ்வளவு தூரம் பங்களிப்புச் செய்யப்போவதில்லை.எனினும்,கோழி இறைச்சி மூலம் இதனை ஓரளவு  ஈடு செய்து கொள்ளலாம்.இலங்கையின் கோழி உற்பத்தியினால் அதனை நிறைவு செய்ய இயலாத போது இறக்குமதி மூலம் மிகக் குறைந்த விலையில் கோழி இறைச்சியை சந்தையில் பெற்றுக்கொள்ளச் செய்யலாம்.மிகக் குறுகிய நாட்களுக்குள் இரசாயன பொருட்களினால் உற்பத்தியாகின்ற கோழி வர்க்கமே இதன் போது சந்தைக்கு வரும்.இது நோயினை நாமே தேடிச் சென்று எமக்குள் செலுத்துவது போன்றாகும்.இது வேலிக்கு வவைத்த முள் தன் காலைத் தைத்த கதையாகப்போகிறது.மேலும்,இறக்குமதி மூலம் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி காணும்.மேலும்,இன்று இலங்கையில் மரக்கறிகள் கூட அதிக விலையில் தான் விற்பனையாகின்றது.இப்படி இருக்கையில் இத் தடையும் அமுலிற்கு வந்தால் இன்னும் அது இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.இது முஸ்லிம்களை மாத்திரம் பாதிக்கப்போவதில்லை.அதிக விலை கொடுத்தே இறைச்சியை முஸ்லிம்கள் நுகர்கின்றனர்.அவர்களுக்கு தற்போதுள்ள மரக்கறி விலைகள் சிறிது அதிகரித்தாலும் அதிகம் பாதிக்கப்போவதில்லை..மரக்கறியை மாத்திரம் உண்டு வாழுபவர்களை இத் தடை பாதிக்கும்.

முஸ்லிம்களில் சிலர் நாம் இறைச்சி உண்ணாமல் வாழ முடியாதா என்ற வினாவை எழுப்புகின்றனர்.இறைச்சியை உண்டு தான் முஸ்லிம் வாழ வேண்டியதில்லை என்பதை மறுப்பதற்கில்லை.மிருகவதை எனக் கூறி  மாடு அறுப்பதை தடுக்க முயலும் இவ் பேரின சமூகம் ஆடு அறுப்பதில் கூட அவ்வளவு அக்கரை காட்டியதாக அறியமுடியவில்லை.பௌத்த மதம் தடுக்கும் வட்டி,மதுபான விடயத்தில் இப் பேரின சமூகம் சிறிதும் அக்கரை காட்டுவதாக இல்லை.வட்டி,மதுபானம் ஆகியவற்றை இலங்கை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு முஸ்லிம்கள் பூரண பங்களிப்பு வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.இவ் விடயத்திலெல்லாம் வாய் மூடி இருக்கும் இவ் பேரின சமூகம் முஸ்லிம்களை பாதிக்கவல்ல இவ் விடயத்தை மாத்திரம் தூக்கிப் பிடித்திருப்பது முஸ்லிம்களை எதிர்க்கும் நோக்கில் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.வேறு காரணங்களை கூறி இதனை தடுக்க முயற்சித்தால் அதனை விட்டுக்கொடுப்பதற்கு சிந்திக்கலாம்.முஸ்லிம் என்றதால் எதிர்க்க வரும் ஒரு விடயத்தை நாம் விட்டுக் கொடுக்க முடியாது.இன்று மாட்டிறைச்சி என்பார்கள்,அடுத்தது பாங்கு ஒலி என்பார்கள்.இப்படி ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து நாளை மனிதனை கடிப்பார்கள்.இப்படி சிறிது சிறிதாகவே மஹிந்த காலத்தில் இனவாதம் துளிர்விட்டு பாரிய கலவரத்திற்கே காரணமாகியது என்ற வரலாற்றை நாம் மறந்து விட முடியாது..

குறிப்பு: இக் கட்டுரை 2016-01-22ம் திகதி வெள்ளிக்கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.