பெப்ரவரி முதல் பொதுவான கட்டண முறை ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை !

images
பெப்ரவரி மாதம் 1ம் திகதி முதல் புதிதாக தொலைபேசி இணைப்புக்களை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புக் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 

இதனூடாக அனைத்து வகையான தொலைபேசி இணைப்புக்களிலும் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 

வெவ்வேறான தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்களினால், நிமிடத்திற்கு மற்றும் செக்கன்களுக்கு அறவிடப்படுகின்ற கட்டண வித்தியாசங்களை அவதானத்தில் கொண்டு பெப்ரவரி முதல் பொதுவான கட்டண முறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி பெப்ரவரி 01ம் திகதி முதல் அனைத்து விதமான தொலைபேசி நிறுவனங்களினாலும் புதிதாக விநியோகிக்கப்படுகின்ற இணைப்புக்களினூடாக ஒரே அளவான கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன. 

இது சம்பந்தமாக அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த கட்டண முறையை தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்புக்களுக்கும் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தேடிப்பார்ப்பதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவின் பரிந்துரைப்படி தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்புக்களுக்கான கட்டண மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.