ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு இதுவரை அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தின் போது, பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசியலமைப்பின் முக்கிய கருப்பொருள் தொடர்பில் விவாதிக்கின்றமை குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நேற்றைய தினம் இடம்பெறவில்லை என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு குறித்து பிரதமரினால் முன்வைக்கப்பட்ட சரத்துக்களில் ஜனாதிபதி பதவிக்கு பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதிய அரசாங்கம் எதிர்க்கட்சியினரை அடக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராணுவத்தினருக்கு எதிராக அரசாங்கம் சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், இராணுவத்தினரை யுத்த குற்றவியல் நீதிமன்ற முன்னிலைக்கு அழைத்து செல்ல அடித்தளம் இட்டுள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.