இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் பந்து பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் உதவிப் வலைபந்து வீச்சாளர் கயான் விஷ்மிஜித் ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனையடுத்து ஆரம்பகட்ட விசாரணைகளில் அனுஷ சமரநாயக்க மற்றும் கயான் விஷ்வஜித் ஆகியோர் இதனுடன் தொடர்புபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே, இதன் பிரதான சந்தேகநபராக இனங்காணப்பட்டுள்ள, கயான் விஷ்வஜித் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்
அத்தோடு, மற்றைய சந்தேகநபரான அனுஷ சமரநாயக்க சம்பளத்துடன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இரு வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து வாக்குமூலம் அளிக்க, இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இன்று, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
எனினும் இன்று அவர் ஆஜராகாத நிலையில் பிறிதொரு நாளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் முறைப்பாட்டாளர்களான குஷல் ஜனித் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், இந்த விடயம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.