யாப்பு மாற்றத்தில் TNA , SLMC உடன்பாடு கண்டுவிட்டன : எ.எல்.தவம் !

எம்.ஐ.எம்.றியாஸ்

 

 கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட,முழுமையாக பாராளுமன்றத்தையே யாப்பு சபையாக மாற்றும் பிரேரணையும், அதற்குப் பின்னரான ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உரைகள் என்பன சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன. இலங்கையை ஆண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் எல்லோருமே, தங்களின் அதிகாரத்தை தக்கவைக்கவும் கூட்டிக்கொள்ளவுமே முயற்சித்தனரே தவிர, இந்த நாட்டின் எதிர்காலத்திற்கேற்றாற் போல் மாற்றங்களைச் செய்ய முன்வரவில்லை. அவ்வாறு முன் வந்தஒரே ஒருவர்இன்றையஜனாதிபதி மைத்ரிபால சிறி சேன மாத்திரமே எனக் கூறினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் அவர்கள்.

தென்கிழக்குப் பல்கலைக் கழக பட்டதாரிகள் மையத்தின் வருடாந்த நிகழ்வு  நிந்தவூரில் இடம்பெற்றது. அதில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் உரையாற்றினார்.

thavam

இது வரைக்கும் இலங்கையில் கொண்டு வரப்பட்ட யாப்பு மாற்றங்களுக்கு தமிழர்களின் தலைமைகள் வழங்கிய பதில்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் மாற்றமாக, தற்போது கொண்டு வரப்படவுள்ள மாற்றத்திற்கு இன்றைய தலைமை சம்மந்தன் ஐயாவின் பதில் அமைந்திருப்பது, இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் துளிர்விடத் தொடங்கியுள்ளது என்பதையும் நல்லிணக்கத்திற்கான சூழல் உருவாகி வருகிறது என்ற நம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றது.

1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டகுடியரசு யாப்பை, அன்று தமிழர்களின் தலைமையாகவிருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் எதிர்த்தார். குடியரசு யாப்பு சிங்களவர்களை முன்னுரிமைப்படுத்துகிறதே தவிர தமிழர்களுக்கு எதையும் வழங்கவில்லை எனக்கூறி, எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்டுமுகமாகதனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்தார். அதேபோன்று,1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டநிறைவேற்று அதிகாரமும் விகிதாரப் பிரதிநித்துவத்தையும் கொண்ட யாப்பினை, சிறுபான்மைக்குபோதிய காப்பு வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அன்றைய தமிழர்களின் தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்அமிர்தலிங்கம் அவர்கள் நிராகரித்தார்.

ஆனால், இன்றைய தலைவர் சம்மந்தன் அவர்கள் யாப்பு மாற்றத்தை வரவேற்று உரையாற்றியுள்ளார். பிரிவினைக்கான எந்தத் தேவையுமில்லை எனவும், எல்லா இன மக்களினதும் அரசியல் அபிலாசைகளையும் திருப்திப்படுத்தும் வகையில்யாப்பு மாற்றத்தில் ஏற்பாடுகளைச் செய்ய அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு கோரியுள்ளார். விசேடமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்ஆதரவைக் கூறியுள்ளார். சம்மந்தன் அவர்களின் இந்த அணுகுமுறை,நாட்டில்இன நல்லிணக்கத்திற்கான கதவினைத் திறந்திருக்கிறது.

அதே நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. யாப்பு மாற்றத்தில் சிறுபான்மையினரின்அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எல்லோரோடும் திறந்த மனதோடு செயற்படத் தயாராகவும் இருக்கிறது.குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இது தொடர்பில் உடன்பாடு கூடக் கண்டுவிட்டன. இவ்வாறான சாதகமான சூழ்நிலையை இன்றைய அரசியல் பரப்பிலுள்ள பெரும்பான்மைத் தலைவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்பது தான் இன்றுள்ள கேள்வியாகும் என  மாகாண சபை உறுப்பினர் தவம் மேலும் கூறினார்.