நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும் முஸ்லிம்களும் !

 
 SLMC N THAVAM_Fotor
 
 
அடிப்படைக் குறைபாடு
 
யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்  அரசியல் சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும்.
 
மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ் நாளையே அர்ப்பணித்ததாக மார்தட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்நின்று நிறைவேற்றிய சில விடயங்கள் இதற்கு தெளிவான சான்றாகும்.
 
1. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை
2. சூதாட்டச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியமை
3. 18ஆம் அரசியலமைப்புச் சீர்திருத்தம்.
4. மாகாணசபை அதிகாரங்களை வலுவற்றதாக்கிய திவிநெகும சட்ட மூலம்.
 
போன்றவை என்ன நோக்கத்திற்காக இடம் பெற்றது என்பது அனைவரும் அறிந்த இரகசியம் (well known secret) இதற்கு வாக்களித்த எல்லா முஸ்லிம் பிரதிநிதிகளும் எந்த சமூகம் சார் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டனர் என்பதைக் கண்டுபிடிக்க நுணுக்குக் காட்டியோ மோப்ப நாயோ தேவைப்படமாட்டாது.
 
இங்கிருந்தே எமது அடிப்படைக் குறைபாடு ஆரம்பிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கொள்கை சார் அரசியல் ஸ்தாபனங்களிடம் இருக்கின்ற சமூகப் பற்று எமது தலைவர்களிடம் உண்டா? என்றால் அதற்கு விடை அடிப்படைக் குறைபாடு.
 
 
ஜனநாயகமும் நல்லாட்சியும்
 
இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதை 18ஆவது சீர் திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்த மஹிந்தவை எதிர்க்கும் முடிவை ஜனாதிபதி மைத்திரி எடுத்ததிலிருந்தே நாட்டில் நல்லாட்சிக்கான அடிப்படை ஏற்படுத்தப்பட்டது.
குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், பொம்மை அமைச்சுக்கள் என மக்களின் இறைமை (sovereignty) சுக்குநூறான போதே மைத்திரியின் உதயம் அருமருந்தானது.
 
2014.11.11 – சோபித தேரர், ரத்னதேரர் ஆகியோரின் தலைமையில் நல்லாட்சி அமைப்பது தொடர்பான முதற் கூட்டம் இடம் பெற்றது  UNP JVP TNA NFGG இன்னும் பல கட்சிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டனர்.
2014.11.21 – மைத்திரிபால பொது வேட்பாளராக கொழும்பு நகரமண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார்.
2014.11.26 – மகிந்த ராஷபக்ச அரசாங்கத்தின் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக்கின் இணைவு
 
2014.12.23 – றிசாட் பதியுதீன் தனது ஆதரவை மைத்திரிக்கு வழங்குவதாக அறிவித்தார். இருப்பினும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைச்சர் ஹிஸ்வுல்லா சட்டத்தரணி சஹீட் அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான பாயிஸ், சுபையிர் ஆகியோர் மஹிந்தவோடு தொடர்ந்தும் செயற்பட்டமை எம்முன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் முதற் படியாகும்.
 
2014.12.28 – தபால் மூல வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர் தான் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வேறு வழியின்றி மைத்திரிக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது.
 
2014.12.30 –தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கான தனது ஆதரவை தெரிவித்தது.
 
நல்லாட்சிக்கான ஆதரவை காலம் தாழ்த்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்தியது. தமது மைத்திரிக்கான ஆதரவினால் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகி விடக்கூடாது என்பதே அந்தகால தாமதமான ஆதரவின் நோக்கம். அதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அதை இன்று அறுவடையும் செய்கிறார்கள்.
 
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவருடன் சில உறுப்பினர்களைத் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இந்த நல்லாட்சிக்கு ஆதரவை வழங்க தடைகளை போட்டார்கள்.
அதற்காகவே கட்சியின் உயர் பீட கூட்டங்களையும் பல தடவைகள் நடத்தினார்கள். எனினும் மக்கள் நல்லாட்சிக்கு வாக்களிக்க ஏற்கனவே முடிவெடுத்து இருந்ததனாலும் தமது அரசியல் எதிரியான ரிஷாட் பதியுதீனின் மாறுதல் தங்களது அரசியல் இருப்பை கேள்வியாக்கும் என்பதனால் வேறு வழியின்று வழமை போன்று ‘சென்றுவருகிறோம்’ என மகிந்த ராஜபக்சவிடம் கூறிவிட்டு வந்தவர்கள் இன்று நல்லாட்சியை குறை கூறுகின்றனர்.
 
இருப்பினும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அத்தருணங்களில் ‘இந்நாட்டு முஸ்லிம்களை இறைவனுக்கு அடுத்து மஹிந்தவால் மட்டுமே காப்பாற்றமுடியும்’ என்று தனது நன்றி விசுவாசத்தை காட்டுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதம் முஸ்லிம் சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்த அருவருப்பானதொரு நிகழ்வாகும்.
 
ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சிக்காக ஆதரவு வழங்கும் முடிவை SLMC ACMC ஆகியன இக்கட்டான நிலையிலிருந்தே எடுத்தன என்பதற்கு மேற்காட்டிய திகதி வாரியான நிகழ்வுகள் (chonological events) சிறந்த சான்றாகும்.
 
நாட்டில் நல்லாட்சி மலர்ந்து சுமார் ஒருவருடம் கழிந்த நிலையில், சிறுபான்மையின மக்கள் எத்தகைய நலன்களைப் பெற்றுள்ளனர் என்பது குறித்த சூடான வாதப் பிரதிவாதங்கள் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
வலுவானதொரு கட்சியின் ஸ்திரத்தன்மையை அடகு வைத்தே இந்த நல்லாட்சி பெறப்பட்டது. UNP UPFA ஆகிய கட்சிகள் இணைந்து செயற்பட்டு பல தியாகங்களையும் விட்டுக் கொடுப்புக்களையும் செய்தமையினாலேதான் நாட்டின் இன்றைய நல்லாட்சி மலர்ந்தது.
 
மடமைத் தனம்
 
பொதுவாக மடமைத்தனத்துக்கு அர்த்தமாக குறிப்பறிந்து நடக்காமை, புத்திசாலித்தனம் இல்லாமை என்று குறிப்பிடலாம். எங்களது அரசியல்வாதிகள் அரசியல் பேசும் இடமாக பொது மக்களுடனான சந்திப்புக்கள் மற்றும் பாடசாலைகளில் இடம் பெறும் நிகழ்வுகளையே பயன்படுத்துவார்கள்.
 
இவ்வறான இடங்களில் அரசியல் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லையென்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், அங்கே மட்டும்தான் அரசியல் பேச இவர்களால் முடியும்.
 
பலமான அமைச்சுப் பதவிகளை வகித்தும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அறிந்திருந்தும் அதனை நிவர்த்திக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்விக்கு நாம் விடையேதும் எதிர்பார்க்கத் தேவையே இல்லை.
 
நல்லாட்சியின் ஒரு வருட பூர்த்தியில் இவ்வாட்சி மக்கள் மனதில் எவ்வாறான பிரதி விம்பத்தை தோற்றுவித்துள்ளது என்கின்ற கருத்தாடலைத் தொடங்க முன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மனங்களில் அது எத்தகைய பேரிடியை இறக்கியுள்ளது என்பதை அன்மையில் இறக்காமத்தில் இடம் பெற்ற வாழ்வாதார உதவியான கோழிக்குஞ்சிகளை வழங்கும் நிகழ்வில் மாகனசபை உறுப்பினர் ஏ. எல். தவமின் கீழ்வரும் கூற்று புலப்படுத்தியுள்ளது.
 
“ஒரு வார காலத்திற்கு நாட்டில் நல்லாட்சியைக் கொண்டாடுமாறு பணிக்கப்பட்டுள்ளோம். நாமும் கொண்டாட முயற்சிப்போம். ஆனால், இவ்வாட்சியில் தமிழ் சமூகமும் மலையக சமூகமும் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்களை விட எமது சமூகம் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்கள் குறைவானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்”
 
நிச்சயமாக! ஏற்றுக் கொள்ளாமல் எப்படி இருப்பது? சகோதரர் தவத்தின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை அனுகூலங்கள் குறைந்துதான் போகும்.
இன் நிகழ்வில் கோழிக்குஞ்சிகளை வைத்து எவ்வாறு தமது பொருளாதாரத்தை மேன்படுத்துவது என்று கூறியிருந்தால் நிகழ்வில் கலந்நது கொண்ட மக்களுக்கு பிரயோசனமாக இருந்திருக்கும்
 
நல்லாட்சியின் பயன்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்? மைத்திரிபால சிரிசேனவா? ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது வழமை போன்று இதன் பின்னாலும் யூதனின் சதி இருக்கிறதோ தெரியாது. காரணத்தை தெளிவாக யோசித்துப் பாருங்கள்.
 
தவத்தின் உரையில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட எமது சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்ய எந்த போராட்டமோ முயற்சியோ செய்யப்படவில்லை. அப்படியானால், இந்த வெற்று கோசங்களால் எதனை சாதிக்க நினைக்கிறார் தவம் என்று தெரியவில்லை.
 
இதைவிட வேகமாக, தேர்தல் காலம் வந்தால் முஸ்லீம் சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் முழங்குவார்கள். முஸ்லீம் சமூகத்தின் காவலர்கள் என மார்தட்டிகொள்கின்ற உங்களுக்கு பிரச்சினையை தீர்ப்பதற்கு உண்மையான அக்கறை இருக்கின்றதா? என மனச்சாட்சியைத்தொட்டு சொல்லுங்கள்! பிரச்சினை முடிந்துவிட்டால் உங்களால் எப்படி அரசியல் செய்ய முடியும்.
 
இந்த விடயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரே வகையான போக்கைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள். அமைச்சரவைக் கூட்டத்தில், பாராளுமன்றத்தில், மாகாண சபை ஒன்று கூடலில் பேச வேண்டியவற்றை விடயமே அறியாத அப்பாவிகளிடம் பேசுவதால் தான் அதனை மடமைத்தனமாக கருத வேண்டியிருக்கிறது.
 
தமிழ்ச் சமூகமும், மலையக மக்களும் பெற்றுக் கொண்ட நலன்கள் வெறுமனே தானாகவே நடந்தவை என்று கூறமுடியுமா? அதற்கு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டுதான் இத்தகைய அடைவை அவர்கள் பெற்றுள்ளார்கள்.
 
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு வழக்கு நடவடிக்கை ஏதுமின்றி கைது செய்யப்பட்டவர்களில் 60இற்கு மேற்பட்டவர்களை வெளியே கொண்டு வந்துள்ளனர், இது சாதாரண விடயமல்ல. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போராடிய ஒரு குழுவினரை நாட்டில் சுதந்திரமாக நடமாட விடுவது பல்வேறு அழுத்தங்களை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இக்கோரிக்கையில் அவர்கள் வென்றுள்ளார்கள் என்றால் தன்னலமற்ற அம்மக்கள் பிரதிநிதிகளின் முழு மொத்த முயற்சியாகவே அதனைக் கருத வேண்டியிருக்கிறது.
 
இதுமாத்திரமல்லாமல் இந்த நல்லாட்சியை பயன்படுத்தி அதியுயர் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்தப்பட்ட 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் மக்களுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன் எதிர்வரும் நாட்களில் மேலும் 800 ஏக்கர் நிலங்கள் கையளிக்கப்பட உள்ளது. இவ்விடயங்கள் இந் நாட்டிலுள்ள சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தீனி போடும் நிகழ்வுகளாகும்.
 
வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, நாட்டினுள் பெறப்பட வேண்டிய உரிமைகளுக்காக தொடர்பாக சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்துவது, இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக தமிழ் மக்களின் தேவைனளைத் பூர்த்தி செய்துள்ளனர். வெறுமனே அரசே வலிந்து இந்த செயற்பாடுகளை மக்களுக்கு வழங்கியது என்று கருதுவதும் முட்டாள் தனத்தில் ஒன்றுதான்.
 
ஆனால் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள், மத்தியிலும் மாகாணத்திலும் அமைச்சுப்பதவிகள் முதலமைச்சுப்பதவி மற்றும் தேசிய பட்டியல்களை பெறுவதற்கு எடுத்த முயற்சிகளில் ஒரு சதவீதமேனும் இந்த சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டிருக்குமாயின் நிச்சயமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் முஸ்லீம்களின் பூர்வீக காணிகளை மீட்டெடுத்திருக்கலாம். பலபிரச்சனைகளும் தீர்ந்திருக்கும்!
 
தமக்கு கிடைக்க வேண்டிய சுகபோகங்களை, பதவிகளை, வசதி வாய்ப்புக்களை தூக்கிவீச தயாராக இருந்திருந்தால், மக்களின் உரிமைகளை அரசிடம் பேரம் பேசும் நெஞ்சுரம் நிச்சயமாக வரும் என்பதில் ஐயமில்லை.
 
பேசாமடந்தை
 
முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமின் பாணி சற்று வித்தியாசமானது. பேச வேண்டியதை அது சென்றடையக் கூடிய இடத்தில் பேசாமால் ஊமையாக இருந்து விட்டு தேர்தல் காலங்களில் மட்டும் வழக்கம் போன்று தன் காந்தக் குரலாலும் பேச்சாற்றலாலும் மக்களை முட்டாளாக்கும் கோட்பாடுகளை முன்மொழிவார்.
நாட்டின் அதிகார மையத்தில் கொள்கை வகுப்புக்கள் நடைபெறும் போது அந்தந்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தத்தமது சமூகங்களின் நலன்களில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது எமது தலைமைகள் ‘முஸ்லீகளின் ஏக பிரநிதி’ என்று கூப்பாடு போடும் வேலையை மட்டுமே செய்கின்றார்கள்.
 
இந்த அப்பாவி சமூகத்திடம் இருந்து அதிக மாலைகளையும் புள்ளடிகளையும் பெருகின்ற தேசிய தலைவர்களுக்கான போட்டி நடக்கிறதே ஒழிய மக்களின் பிரச்சினைகளை தேசியமயப்படுத்த சர்வதேசமயப்படுத்தவும் நடவடிக்கைகள் எதுவும் நடப்பதாய் இல்லை.
 
எமது தலைவர்களுக்கு ஆங்கிலம் தெரியும், சிங்களம் தெரியும், நன்றாக மேடையில் பேசத்தெரியும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகத் தெரியும், ஆடத் தெரியும், பாடத் தெரியும் ஏன், கம்பன் விழாக்களில் கவிதையும் பாடத் தெரியும்.
ஆனால் இந்த சமூகத்தின் ஆண்டாண்டு கால பிரச்சனைகளை எங்கே போய் பேசித் தீர்ப்பது என்பது மட்டும் தெரியாமல் இருப்பதுதான் இந்த சமூகத்தின் சாபக்கேடே தவிர வேறு ஒன்றுமில்லை.
 
புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதனூடாக இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி எழுதும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அரசியல் அமைப்பு சபையில் முஸ்லீம் சமூகத்தின் ஏக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை சரியான கரிசனையில்லாமல் இருந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு இருந்து கொண்டு இருப்பதன் ஆபத்தினை இந்த சமூகம் எதிர் நோக்கத்தான் போகின்றது.
 
புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டு வரப்பட்டதன் பின்னால் அதில் முஸ்லீம் சமூகத்தின் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை என்கின்ற வரலாற்றுத் தவறு இடம்பெற்று இந்த சமூகம் அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரம் அற்ற ஓர் அநாதை சமூகமாகும் போது,
 
அதனையும் வைத்து எப்போதும் அரசியலில் தூங்கியே கிடக்கின்ற இந்த முஸ்லீம் சமூகத்திற்குன் வாக்குகளை பெற ‘சிங்கள தலைவர்களும், தமிழ் தலைவர்களும் எங்களை ஏமாற்றி விட்டார்கள்’ என்று கூறும் அயோக்கியத்தனத்தை தவிர வேறு எதனை எமது முஸ்லிம் தலைமைகளால் கூறமுடியும்.
 
மக்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் உங்கள் மீதுள்ள நம்பிக்கை என்று மட்டும் தயவு செய்து நினைத்து விடக்கூடாது. வேறு தெரிவு மக்களுக்கு இல்லை என்பதால்தான் நீங்கள் இன்னும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் சென்று கெண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காமல் இருப்பது நல்லது.
 
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்ததாக, அதற்காக போராடியதாக
புலவர்களை வைத்து, பொற்கிளி கொடுத்து, புகழ்மாலை எழுதி, கற்களில் பொறித்து, மண்ணுள் புதைத்தாலே ஓழிய, உலகம் உங்களை உதவாக்கரையாகத்தான் எழுதும்!!
 
ஏ.எல்.ஆஸாத் – அக்கரைப்பற்று
இலங்கை சட்டக்கல்லூரி
aazath