வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் நாமல் ராஜபக்ஷ அவருக்கு இரண்டு தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அதே போன்று வசீமின் கொலையாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள கெப்டன் திஸ்ஸவுக்கு நாமல் மூன்று தடவைகள் கொலை நடந்த நேரத்துக்கு அண்மித்த நேரத்தில் தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார். திஸ்ஸவும் குறித்த நேரப்பகுதிக்குள் ஐந்து தடவைகள் நாமலுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார்.
வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக டயலொக் நிறுவனம் அண்மையில் நீதிமன்றத்தில் கையளித்திருந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த பட்டியலிலிருந்து மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒன்றரை வருட காலமாக வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்களை அண்மிக்கும் காலங்களில் இத்தகவல்கள் பரபரப்பாக பேசப்படுவது வாடிக்கையாகியுள்ளது.
எனினும் இன்று வரை வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
இப்படுகொலைக்கு பல வருடங்களுக்கு முன்னர் நடந்த பிரகீத் எக்னெலிகொட கொலை வழக்கில் கூட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளபோதும், வசீம் தாஜுதீன் கொலையில் மட்டும் ஊடக பரபரப்புகள் தவிர உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.