மறக்கடிக்கப்பட்ட தேசியப்பட்டியல் !

 

hakeem_Fotor_Collage_Fotor

ஒரு நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. களமுனையில் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. களத்தில் நின்ற படைச் சிப்பாய்களுள் பலருக்கு பசியெடுக்கத் தொடங்கி விட்டது. அவர்கள் தளபதியிடம் ‘பசிக்கின்றது’ என்று சொன்னார்கள். அதற்கு தளபதி சொன்னார், ‘நம்மிடம் உணவு கொஞ்சமாகவே இருக்கின்றது. இதனை இப்போது சாப்பிட்டு விட்டால் இன்னுமொரு தடவை பசித்தால் சாப்பிட எதுவும் இருக்காது. எனவே இன்னும் சற்று முன்னேறிச் சென்ற பின் சாப்பிடுவோம்’ என்று. சிப்பாய்களும் சரி என தலையசைத்தனர். தளபதி ‘மூவ், மூவ்’ (முன்னேறு) என்ற உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறிக் கொண்டே படையணியை முன்னகர்த்திக் கொண்டிருந்தார். இப்படியே நீண்ட தூரம் சென்றுவிட்டனர், நேரமும் போய்விட்டது. ஆனால், தளபதியோ சாப்பாட்டை பங்கிடுவதாக இல்லை. ஒரு சிப்பாய்க்கு பசிமேலிட்டு, கோபம் வந்து விட்டது. தளபதியை நெருங்கிக் கேட்டான், ‘சேர்… ஒரு மூவ் எத்தனை கிலோமீட்டர் தூரம்? எப்போது சாப்பாட்டை தருவீர்கள்?’ என்று.

 

இப்படியான கேள்வி ஒன்றையே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைப் பார்த்து கேட்பதற்கு மக்கள் ஆசைப்படுகின்றார்கள். பிறகென்ன, மக்களின் கட்சியாக இன்று வரையும் நேசிக்கப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக கிடைத்த இரண்டு நியமன பாராளுமன்ற உறுப்புரிமைகளை இன்னும் நிரந்தரமாக உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்க கட்சிச் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. ‘இப்போது நெருக்கடியாக இருக்கின்றது. யாருக்கு கொடுப்பதென தீர்மானிப்பதற்கு கால அவகாசம் இல்லை. எனவே சில நாட்களுக்கு தற்காலிகமாக இவர்கள் இருவருக்கும் வழங்குவோம்’ என்று கூறியே பல மாதங்களுக்கு முன்னர் அவ்விரு எம்.பி. பதவிகளும் தற்காலிகமாக பங்கிடப்பட்டன. ஆனால், தலைவரின் கணக்கில் ஒரு மூவ், அதாவது சில நாட்கள் என்பது எத்தனை மாதங்கள் என்று கேட்டறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

தேர்தல்கால வாக்குறுதி

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதன் பின்னரான பாராளுமன்ற தேர்தல் கால நிகழ்வுகளை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்ற பின்னரே, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் அறிவிப்பை மு.கா. வெளியிட்டது. இருப்பினும் அத்தேர்தலில் மேடைகளில் பேசுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ, இனவாதம் என்ற சரக்குகள் கைகளில் இருந்தன. ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்களிடம் எதைச் சொல்லியும் வாக்குக் கேட்க முடியாத ஒரு நிலையில் மு.கா. இருந்தது என்றே கூற வேண்டும். ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் தாம்சார்ந்த மக்களுக்காக செய்த அசுர காரியங்கள் ஏதேனும் இருந்திருந்தால், அதைச் சொல்லி மக்களின் ஆணையை கோரியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமில்லாதிருந்த காரணத்தால் ஏதாவது ஒரு பேசுபொருள், வாக்குறுதி, ஆசைகாட்டல் அவசியமாக இருந்தது.

 

அந்தவகையில், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தலைவர் ஹக்கீம் தனது முக்கிய பேசுபொருளாக்கியிருந்தார். செல்லுமிடமெல்லாம் தேசியப்பட்டியல் பற்றிய வாக்குறுதிகள் அவரால் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 10 பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக மேடையில் வாக்குறுதியளித்தார். ஒருவேளை எல்லா ஊர்களிலும் இந்த அர்த்தத்தில் தான் இவ்விடயத்தை கூறவில்லை. அவர்கள் பிழையாக புரிந்துள்ளார்கள் என்று தலைவர் இப்போது கூறினாலும், அந்தந்த ஊர்களின் மக்கள் அவரது பேச்சை அவ்வாறே விளங்கி வைத்திருக்கின்றனர்.

 

தேசிய அரசியலில் ஒரு சிறிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸிற்கு உயர்ந்தபட்சம் 2 தேசியப்பட்டியல் எம்.பி.க்களே கிடைக்கும் என்பது சிறுபிள்ளைக்குக் கூட தெரிந்த கணக்கு. இவ்வாறிருக்கையில் அதிகமான ஊர்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டியதில் கட்சித் தலைவருக்கு முழுமுதற் பங்குண்டு. இதனைக் கூட சாணக்கியம் என்று சொன்னவர்களும் உண்டு. அந்த சாணக்கியம் பின்னர் எவ்வளவு சிக்கலை தோற்றுவித்தது என்பதையும், அதை இன்றுவரை சிக்கெடுத்துக் கொள்ள முடியாதிருப்பதையும் அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

 

‘மக்கள் தேசியப் பட்டியல் கேட்டால் தர முடியாது என்று தலைவர் சொல்ல முடியாது தானே? எனவேதான் தலைவர் மக்களை திருப்திப்படுத்துவதற்காக அப்படிச் சொல்லியிருக்கின்றாh’ என்று என்னிடம் மு.கா.வின் மூத்த உறுப்பினர்கள் சிலர் சொன்னார்கள். உண்மைதான், யாரையும் மனநோக வைக்கக் கூடாது என்று எண்ணும் தலைவர் ஒருவர் நமக்கு கிடைத்திருப்பாராயின் அது சந்தோசமே. ஆயினும், இப்போது இரண்டே இரண்டு எம்.பி.க்கள் இருக்கின்ற நிலையில் அதை சுழற்சி முறையில் பங்கிட்டாலும் 4 பிரதேசங்களை அல்லது தனிநபர்களையே திருப்திப்படுத்த முடியும் என்ற நிலை காணப்படுகின்றது. இதனால் மீதமிருக்கின்ற ஊர்கள் அதிருப்தி கொள்ளப் போகின்றதே, அதுபற்றி இந்த ‘விளக்கமளிப்போர் சங்கம’; என்ன கூறுமோ தெரியாது.
முஸ்லிம்கள் முன்னொரு காலத்தில் அசித்த பெரேரா என்கின்ற அரசியல் செயற்பாட்டாளருக்கு தேசியப் பட்டியலை கொடுத்து அழகுபார்த்தார்கள்;. ஒரு சிங்களவன் நமது எம்.பி.யை எடுத்துக் கொண்டு போகின்றானே என்;று அவர்கள் ஒருபோதும் பொறாமைப்பட்டது கிடையாது. ஆனால், இன்று என்ன நடக்கின்றது? பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் அல்ல, பக்கத்து ஊரைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு தேசியப்பட்டியல் கொடுப்பதைக் கூட விரும்பாத சமூகமாக முஸ்லிம்கள் சிருஷ்டிக்கப்பட்டு உள்ளார்கள். ஊருக்கொரு எம்.பி. கோஷமும் தேசியப்பட்டியல் உறுப்புரிமை தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் ஒவ்வொரு ஊரிலுள்ள மக்களையும், ‘ஊர் நலன்விரும்பிகள்’ என்ற பெயரில் குறுகிய அரசியல் சிந்தனை கொண்டவர்களாக மாற்றியிருக்கின்றது.

 

இதற்கு யார் காரணம்? பிரதேச வாரியாக மக்களைப் பிரித்து ஒவ்வொரு ஊருக்கும் எம்.பி. தேவை என்ற கருத்துநிலையை உருவாக்கி மூன்றாந்தர அரசியல் செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி, ஐ.ம.சு.முன்னணி அரசியல்வாதிகளும், தேசியப்பட்டியல் எம்.பி. ஆசையை ஊட்டி வளர்க்கும் ஹக்கீம் போன்ற தலைவர்களுமே காரணம் என்றால் பலருக்கு கோபம் வரலாம். இவ்வாறான ஒரு நிலைமை இல்லாதிருந்தால், முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு கிடைத்த தேசியப்பட்டியலை யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுத்திருக்கலாம். யாரும் எந்த ஊர் பொதுமக்களும் இதனை விமர்சித்திருக்க மாட்டார்கள். ஹக்கீமும் இப்படியான ஒரு இக்கட்டுக்குள் சிக்கியிருக்க மாட்டார். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அப்படியான ஒரு ஆரோக்கிய சூழல் முஸ்லிம் அரசியலில் இல்லாது போய்விட்டது.

 

நம்பிக்கைசார் பிரச்சினை

இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாகவே மு.கா. தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தனக்கு நெருக்கமான இருவரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமித்தார். இதை ஹக்கீம் திட்டமிட்டுச் மேற்கொண்டதாக சிலர் சொல்கின்றனர். அது உண்மைக்குப் புறம்பானதும் அபாண்டமான குற்றச்சாட்டுமாகும். அவர் பல விடயங்களை திட்டமிட்டுச் செய்கின்றார் என்றாலும்; இதை அவர் திட்டமிடவில்லை. உண்மையில் பல ஊர்களில் வாயைக் கொடுத்து அவர் மாட்டிக் கொண்டார். பின்னர், இப்படி ஒரு வாக்குறுதியை மடத்தனமாக அளித்துவிட்டோமே என்று தன்மீதே கழிவிரக்கம் கொண்டு தலையில் அடித்துக் கொண்டார். தனது சகோதரர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரை தற்காலிகமாக நியமித்து, இப்பிரச்சினையை ஆறப்போட்டு ஆற்றுவதற்கு நினைத்தார் ஹக்கீம்.

 

டாக்டர் ஹபீஸ் மிகவும் மென்மையான குணாதசியம் கொண்ட நல்ல மனிதர். அவர் போன்றவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோல் சட்டத்தரணி சல்மானும் மு.கா.வின் நீண்டகால உறுப்பினரே. மறைந்த தலைவரால் கட்சிக்குள் அழைத்து வரப்பட்டு முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டவர். அண்மைக்காலத்தில் அவரது போக்குகளை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், முன்னர் ஒரு தடவை தனக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி.யை சுஹைரைப் போல எடுத்துக் கொண்டு ஓடிவிடாமல், அசித்த பெரேரா போல இராஜினாமாச் செய்து விட்டுக் கொடுத்தவர் என்ற அடிப்படையில், கட்சியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்கின்றார். இவர்கள் இருவரும் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டதில் பிரச்சினையில்லை.

 

பிரச்சினை என்னவென்றால், தலைவருக்கு நம்பிக்கையானவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே. அப்படியென்றால் கட்சியில் மீதமாக இருக்கின்;ற சிரேஷ்ட, கனிஷ்ட உறுப்பினர்கள், இந்த 30 வருடங்களாக கட்சிக்காக உழைத்தோர் எல்லோரும் நம்பிக்கை அற்றவர்களா? அல்லது நம்பிக்கை குறைந்தவர்களா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் தனது தேசியப் பட்டியலிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியலிலுமாக 30 இற்கு மேற்பட்டோரை ஒரு சம்பிரதாயத்திற்காக பெயரிட்டுக் கொடுத்திருந்தது. இதுதவிர தேசியப்பட்டியல் எம்.பி. வேண்டுமென்று கேட்டுக் கொண்டு ஒரு சிலர் தவமிருக்கின்றனர். அதுமாத்திரமன்றி, அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள் என்றெல்லாம் ஆயிரத்தெட்டுப் பேர் கட்சியில் இருக்கின்றார்கள். இவர்களுள் யாருமே எம்.பி. ஒன்றை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு தலைவரின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் சம்பாதிக்கவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கின்றது.

 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கங்களில் பிரதானமானது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும். இன்று அக் கட்சி அகலக் கிளைவிரித்து தேசிய கட்சியாக தன்னை வெளிப்படுத்தினாலும் இதன் தாய் வீடு கிழக்கு மாகாணமாகும். இம்முறையும் அதிக வாக்குகள் கிழக்கில் இருந்து கட்சிக்கு கிடைத்திருக்கின்றன. எனவே, தற்காலிகமாக ஒரு தேசியப்பட்டியல் எம்.பி.யை வழங்குகின்ற போது கிழக்கு மாகாணத்திற்கு தலைவர் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்.

 

குறிப்பாக, தேசியப்பட்டியலுக்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஒரு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. அப்படியானவர்களில் ஒருவருக்கு தற்காலிக எம்.பி.யை வழங்கியிருக்கலாம். அது ஒரு மாதத்திற்கான எம்.பி.யாக இருந்தாலும், அவர் இன்னுமொரு தடவை எம்.பி.கேட்டு வருவதை இதன்மூலம் தடுத்திருக்கலாம். பரிசீலனைப் பட்டியலில் ஒருவரின் பெயர் குறைந்திருக்கும். அதேபோல், கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள், மூத்த போராளிகளில் ஒருவரை அல்லது இளைய துடிப்புள்ள ஒருவரை தேசியப்பட்டியலுக்கு நியமித்திருக்கலாம்.

 

இவ்விரு வகையான பட்டியலிலும் ஹசன்அலி, நிசாம் காரியப்பர், முழக்கம் மஜீத், சட்டத்தரணி கபூர், அட்டாளைச்சேனையை சேர்ந்த பளீல், ஹனீபா மதனி, திருமலை தௌபீக், மட்டக்களப்பு அப்;துர் ரஹ்மான்;… என மேலும் பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். இவர்களுள் இருவருக்கு எம்.பி.யை கொடுத்திருந்தால், ஒரு பகுதியினர் திருப்தி அடைந்திருப்பர். கட்சி நமக்கும் எம்.பி.யை தந்துள்ளதுதானே என்ற ஆறுதல் அவர்களுக்கு கிடைத்திருக்கும். அவ்வாறில்லாவிட்டால், தனியே வாக்களித்து ஒரு எம்.பி.யை பெற முடியாத சிற்றூர்களுக்கு ஒரு சில காலத்திற்கு தேசியப்பட்டியலை கொடுத்து அழகு பார்த்திருக்கலாம். இதில் நம்பிக்கை பற்றிய பிரச்சினை ஏற்பட்டிருந்தால் சட்டத்தரணி அல்லது பள்ளிவாசல் முன்னிலையில் உடன்படிக்கை கைச்சாத்திட்டு அப் பதவியை கொடுத்திருக்கலாம். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை.

 

சட்டத்தின் சிக்கல்

 

ஏனென்றால், உண்மையிலேயே இதில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதாவது, தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடாத ஒருவரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் இருக்கின்றது. இதற்கு முன்னர் அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தாலும் இனிமேல் அதைச் செய்ய இடமளிக்கப்படாது என்று தேர்தல்கள் ஆணையாளர் முன்னமே அறிவித்துவிட்டார். ஏற்கனவே சட்ட நடவடிக்கையில் இறங்கிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் இது விடயத்தில் விழிப்புடன் இருக்கின்றது. எனவே, இந்த அடிப்படையில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு சிக்கல்நிலை ஏற்பட்டது என்பது உண்மையே.

 

ஆனால், சட்டத்தரணியான ஹக்கீம் இதை அறியாதவராக இருந்திருக்க முடியாது. அப்படியென்றால், யாரை உண்மையில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டுமோ அவர்களின் பெயர்களையே தேசியப் பட்டியலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவர்கள் மேலே சொன்னதுபோல், தேசியப் பட்டியலுக்காக காத்திருப்போராக, மூத்த போராளியாக, சிற்றூர்வாசியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்வதை தலைவர் தவறுதலாகவோ வசதியாகவோ மறந்து விட்டார். அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, பெயர் இல்லாதவனை எம்.பி.யாக்க முடியாதென்ற நிலை காணப்படும் போது, ஒவ்வொரு ஊருக்கும் எம்.பி. தருவதாக ஆசை காட்டியதும், இப்போது சட்டம் தடுக்கின்றது என்று சொல்வதும் மக்கள் செய்த தவறில்லையே.
மு.கா.வுக்கு கிடைத்த தேசியப்பட்டியலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கே அதிக உரிமை இருக்கின்றது என்பது உண்மையென்றால், இன்று கிழக்கு மக்கள் அதை தற்காலிகமாக தொலைத்திருக்கின்றார்கள் அல்லது களவாடப்பட்டிருக்கின்றது. இன்று கிழக்கிற்கு வெளியே உள்ள தலைவரின் உறவினரும் நண்பரும் அதை அனுபவிப்பது ‘ஊரார் கோழியை அறுத்து சுற்றத்தாருக்கு விருந்து வைக்கும் உவமானத்தை ஞாபகப்படுத்துவதாக’ ஆரம்பகால விழிப்புக்குழுவில் செயற்பட்ட போராளி ஒருவர் என்னிடம் சொன்னார். உண்மையில் போராளிகளுக்கு நிதர்சனங்கள் விளங்குகின்றது, பக்தர்களுக்குத்தான் விளங்காமல், கட்டுரையை விமர்சிக்க தலைப்படுகின்றார்கள்.

 

மாதங்களாக இழுபறி

ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மக்கள் மன்றத்திலும் இந்நியமனங்கள் குறித்த பாரிய வாக்குவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால், தலைவர் இராஜதந்திர அடிப்படையில் செயற்பட்டு மாகாண சபை உறுப்பினர் நஸீருக்கு மாகாண சுகாதார அமைச்சை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கண்டியில் இடம்பெற்ற மாநாட்டில் கட்சியின் உயர்பீடத்தில் பலருக்கு பதவிகளை வழங்கினார். எம்.பி. தரவேண்டுமென்று அடம்பிடித்துக் கொண்டிருந்த பலரும் இதில் உள்ளடங்கி இருந்தனர். எனவே, அவர்கள் அதன் பின்னர் தலைவர் எதிர்பார்த்தது போல அடக்கி வாசிக்கத் தொடங்கி விட்டனர். வழக்கம் போல மக்களும் மறந்து விட்டனர். ஆனால் இது அப்படியே மறந்துவிடக் கூடிய விடயமல்;ல.

 

இந்த தேசியப்பட்டியல் விடயத்தில் பல தவறுகள், அநியாயங்கள் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் இழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நான் மீண்டும் சொல்கின்றேன், இதை தலைவர் திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. அப்போதிருந்த நெருக்கடியான சூழலில் தீர்மானம் எடுக்க முடியவில்லை. ஆனால் இரண்டு பேரின் பெயர்களை அறிவிக்க வேண்டியிருந்ததால் இப்படிச் செய்தார். தேசியப்பட்டியல் மோதலின் உக்கிரத்தன்மை தணிந்த பின், எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். நாம் நன்றாக யோசித்து முடிவெடுப்போம் என்றே அவர் நினைத்தார்.

 

சரி, எதுவோ நடந்து விட்டது. நடந்தவற்றை இனி மாற்ற முடியாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டுமென்றால், இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என்பதை தலைமை மறந்து விடலாகாது. ‘தற்காலிக’ என்ற அடிப்படையில் தேசியப்பட்டியலுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 5 மாதங்களாகின்றன. சில நாட்களுக்கு நியமிக்கப்பட்ட பதவிகள் மாதங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஹபீஸ் கட்சி மாறப் போகின்றார் போன்ற – பொய்யான, தேவையாற்ற புதுப்புது கட்டுக்கதைகள் தோற்றம் பெறுவதற்கு இதுவே வழிவகுத்துள்ளது. தீர்வையற்ற வாகனம் போன்ற வரப்பிரசாதங்கள் கிடைக்கும் வரை காத்திருப்பதாக இன்னுமொரு ஒருகூட்டத்தினர் பேசிக் கொள்கின்றனர். இது கட்சிக்கும் தலைவருக்கும் நல்லதல்ல.

 

அதுமட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸ் என்பது இலங்கை முஸ்லிம்களின் பிரதான முஸ்லிம் கட்சியாகும். அதன் தலைவர் றவூப் ஹக்கீமும் அந்த நிலையில் வைத்தே நோக்கப்படுவதால், அவரிடம் சில முக்கிய பண்புகள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறான பல பண்புகள் அவரிடம் காணப்பட்டாலும் சில விடயங்களை அவர் கையாளும் விதம் மக்களை முகம்சுழிக்க வைக்கின்றது, சாணக்கியத்தை சந்தேக கூண்டில் ஏற்றுகின்றது. இதில் தேசியப்பட்டியல் விவகாரமும் ஒன்று எனலாம். ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் பெற்றுத் தர போராடுவதாக கூறும் தலைமைத்துவம், ஒரு சின்னவிடயத்திற்கு கூட 5 மாதங்களாக தீர்க்கமான தீர்வு எடுக்க முடியாத ஒன்றாக இருக்க முடியாது.

 

எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களான ஹபீஸ் மற்றும் சல்மான் ஆகியோர், தலைவர் ஹக்கீம் சொன்ன உடனேயே இராஜினாமாச் செய்வதற்கு தயாராக இருப்பதாக அறிகின்றேன். தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடாத ஒருவரை சுழற்சி முறையில் நியமிக்கும் போது சட்டத்தின் கெடுபிடி குறைவாகவே இருக்குமென சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அந்த இடங்களிற்கு வேறு இருவரை நியமிக்க தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யாராகவும், எந்த ஊர்க்காரராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்கள் மக்கள் சேவகர்களாக, காசுக்கு பின்னால் அலையாதவர்களாக, எம்.பி. பதவிக்கு பொருத்தமானவர்களாக, உருப்படியானவர்களாக இருக்க வேண்டும் என்தே நிபந்தனை. அந்த அடிப்படையில் மேலும் காலம் தாமதிக்காது பாலமுனையில் இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு முன்னர் இதைச் செய்வதற்கு தலைவர் ஹக்கீம் முன்வர வேண்டியுள்ளது.
இல்லாவிட்டால், ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயம், சீழ்பிடித்து நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும்.

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 16.01.2016)

nifras