தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பிருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துங்கள் : அமைச்சர் ரிசாத்

richard_05
இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாத்தவர்கள்.

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு, அவருக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சில் நடாத்தப்பட்ட பாராட்டு வைபவத்தில் அமைச்சர் உரையாற்றினார். 

richard_02

அமைச்சர் றிசாத் இங்கு கூறியதாவது, 

இலங்கையில் போர்க்கால நெருக்கடியின் போதும், போர் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னரும் ஐ.நா சபை முகவர் நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்பை நாம் மறக்க முடியாது. இலங்கை மக்கள் உக்கிரப் போரினால் பாதிக்கப்பட்டிருந்த போது அவர்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த நிறுவனங்கள் அளப்பரிய உதவியை செய்தன. அவற்றை நாம் இன்று நன்றி உணர்வுடன் நினைவு கூருகின்றோம். 

குறிப்பாக நீங்கள் கடந்த நாலரை வருடகாலம் இங்கு பணியாற்றிய காலத்தில் இலங்கை மக்களுக்கு செய்த பணிகளுக்காக நான் தனிப்பட்ட ரீதியில் நன்றி கூறுகின்றேன். 

எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் கஷ்டப்பட்டு வரும் வடமாகாண முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதற்கு சர்வதேச நிறுவனங்களோ இலங்கை அரசோ குறிப்பிடத்தக்க எந்தவிதமான உதவியையும் நல்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் கொண்டுவருகின்றேன். 

நாங்கள் இந்த அகதி மக்கள் தொடர்பாக இன்று கையளிக்கும் உண்மையான ஆவணங்களை நீங்கள் எப்போதாவது, நேரமிருக்கும் போது படித்துப் பார்த்தால் உண்மைகள் விளங்கும். 

முஸ்லிம்கள் மீளக்குடியேறும் போது வில்பத்து என்றும் காணிக் கொள்ளையர்கள் என்றும் கூறி எம்மை தடுக்கின்றனர். 

ஐ.நா நிறுவனம் வழங்கிய நிவாரணத்தில் கூட பழைய அகதிகள், புதிய அகதிகள் என்று பாரபட்சம் காட்டப்பட்டு நாம் புறக்கணிக்கப்பட்டோம். இந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் நான் இவர்களுக்காக குரல் கொடுக்கும் போது என் மீது சேறு பூசுகின்றனர். இனவாத ஊடகங்கள் என்னை குறி வைத்துத் தாக்குகின்றன. 

இலங்கையிலே ஐ எஸ் தீவிரவாதிகள், தலிபான்கள் ஊடுருவி உள்ளனர் என்றும் அவர்களுடன் இலங்கையர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் இங்குள்ள ஊடகங்கள் கதையளக்கின்றன. 

இங்கு இவ்வாறான தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பிருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துங்கள் என நாம் கூறுகின்றோம். 

ஐ.நா நிறுவனத்தில் உயர்பதவி பெற்றுச் செல்லும் நீங்கள் வடமாகாண முஸ்லிம் மக்களின் விடயத்தில் கூடிய கரிசனை செலுத்த வேண்டும். அத்துடன் புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரையிலான இடங்களில் உள்ள முஸ்லிம்களின் காணிகள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த மக்கள் தமது காணிகளில் வேளாண்மை செய்ய முடியாத அவல நிலை இன்று இருந்து வருகின்றது. இவற்றுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார். 

richard_03

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா இணைப்பாளர் சுபினே நந்தி, 

அமைச்சர் றிசாத் பதியுதீனை நான் பல தடவை சந்தித்து பேசியுள்ளேன். அவர் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அவர் காட்டிவரும் அக்கறையையும், ஆர்வத்தையும் நான் நன்கறிவேன். 

இந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர் எமக்கு பலதடவைகள் சுட்டிக் காட்டியுள்ளார். மீள்குடியேற்றத்தில் இந்த மக்களுக்கு அநியாயம் நடக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். நான் உயர்பதவி பெற்றுச் சென்றாலும் அடிக்கடி இங்கு வந்து இந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் கரிசனை காட்டுவேன் என்றும் கூறினார்.