இந்தோனேசியா தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம்!

 
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். முக்கிய இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜகர்தா தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய தரப்பில் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிராத்திப்பதாக கூறினார்.

அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக கூறினார். 

ஈரானுடனான பிரச்சனை குறித்து சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் லண்டனில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். 

இந்த தாக்குதல் சம்பவம் அறிந்ததும் இருநாட்டு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜகர்த்தா தாக்குதல் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வலிப்படுத்த வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்துகிறது என்று சவுதி அரேபியா வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார். 

அதேபோல் நெதர்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே தாக்குதல் நடைபெற்ற பகுதியில் மீண்டும் வெடித்தம் கேட்டது. ஆனால் அது வெடிகுண்டு சத்தம் அல்ல டயர் வெடித்த சத்தம்தான் என்று இந்தோனேசியா போலீசார் தெரிவித்தனர்.