மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படும் CT ஸ்கேன் இயந்திரம்- நோயாளிகள் பெரிதும் அவதி!

 
BatticaloTeachingHospitalபழுலுல்லாஹ் பர்ஹான்
கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக இயங்கிவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் இயந்திரம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் ,இதனால் நோயாளிகள் பெரிதும் அவஸ்தைப் படுவதாகவும் இது குறித்து சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள்,அரசியல் வாதிகள் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவர் இராஜன் மயில்வாகனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கருத்து தெரிவிக்கையில்
மேற்படி  CTஸ்கேன் இயந்திரத்தின் டியூப் ஒன்றை எலி ஒன்று கடித்து சேதமாக்கியுள்ளதாகவும் இதனால் கடந்த சில மாதங்களாக CT ஸ்கேன் இயந்திரம் செயலிலந்து காணப்படுவதாகவும் குறித்த டியூப்பின் விலை 100 இலட்சம் ரூபா எனவும் இந்த டியூப்பை கொள்வனவு செய்வதற்கு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெற்று குறித்த டியூப் ஜப்பான் நாட்டில் இருந்து அதனை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் மூலம் வந்து கொண்டிருப்பதாகவும் அதனை சுமார் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில்  CT ஸ்கேன் இயந்திரத்தில் அந்த டியூப் பூட்டுவார்கள் எனவும் CT ஸ்கேன்  எடுக்க வேண்டிய நோயாளிகளை  CT ஸ்கேன் எடுப்பதற்கு தற்காலிகமாக பொலனறுவை போதனா வைத்தியசாலை,அம்பாறை போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி CT ஸ்கேன் எடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் CT ஸ்கேன் இயந்திரம் நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான பொருள் எனவும் அந்த இயந்திரத்தின் டியூப்பின் விலை 5அல்லது 10 இலட்சம் என்றால் அதை எமது போதனா வைத்தியசாலையே கொள்வனவு செய்திருக்கும் எனவும் 100 இலட்சம் ரூபா என்பதால் சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டுமெனவும் சில நேரங்களில் சில நோயாளிகளை CT ஸ்கேன் எடுப்பதற்கு அம்பியூலன்ஸ்; வண்டி மூலம் அனுப்பி எடுத்து சிகிச்சையளிக்க முடியாது எனவும் அதற்கான நேரம் போதாது எனவும் குறித்த CT ஸ்கேன் இயந்திரத்தின் டியூப்பை அவசரமாக பெறுவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இப்றாலெவ்வை பல தடவைகள் சுகாதார அமைச்சிற்கு சென்று கோரிக்கை விடுத்திருந்தாகவும் இதனை பெறுவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இனதால் தற்போது குறித்த டியூப் ஜப்பான் நாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவர் இராஜன் மயில்வாகனம் மேலும் தெரிவித்தார்.