உங்கள் பிள்ளைகளைக் கட்டாயமாகத் தமிழ் படிக்கவிடுங்கள்: கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் அறிமுக விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. மலேசியாவின் சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் சுப்பிரமணியம், விளையாட்டுத்துறை இணை மந்திரி டத்தோ சரவணன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்து பேசினார்கள். விழாவின் நிறைவான கவிஞர் வைரமுத்து ஏற்புரை வழங்கி பேசினார்.
Vairamuthu-Press-Meet-8
அப்போது அவர் கூறியதாவது:- 

தாய்த் தமிழ்நாட்டையும், உங்களையும் கடல் பிரித்து வைத்தாலும் தமிழ் நமக்கிடையே ஒரு கலாசாரப் பாலம் கட்டி வைத்திருக்கிறது. இங்கே கூடத்திலும், மாடத்திலும் நிறைந்து வழிந்து அமர இடமில்லாமல் நின்றுகொண்டிருக்கிற பெருங்கூட்டத்தைப் பார்க்கிற போது தமிழ் வீழாது தன் சொந்தக் கால்களால் நிற்கும் என்ற நம்பிக்கை பெறுகிறேன். 40 சிறுகதைகளை ஒரே மூச்சில் தொடர்ச்சியாக எப்படி எழுத முடிந்தது என்று இந்த மேடையில் பலபேர் வியந்து கேட்டார்கள். 

பெற்றதுதான் 40 வாரம். அதை என் கருவில் சுமந்தது 50 வருடம். சமூகம் என்ற பல்கலைக்கழகத்தில் காலம் என்னைச் சேர்த்து விட்டிருக்கிறது. ஐம்புலன்களையும் திறந்து வைத்துக்கொண்டு நான் சலிக்காமல் கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஒரு கவிஞன் கதை எழுதும்போது கலைக்கூறு அதிகமாகிறது. கவிதைக்குரிய சொற்சிக்கனத்தைக் கவிஞன் கதைக்குக் கொடுத்துவிடுகிறான். தங்கக் காசுகளைப்போல் இந்தக் கதைகளில் சொற்களை அளந்து செலவழித்திருக்கிறேன். 

நீங்கள் ஒரே உடம்பில் ஒரே வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்கள். ஆனால் இந்த 40 கதைகளும் ஒரே உடம்பில் உங்களை 40 வாழ்க்கையை வாழச் செய்யும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கை கொடுப்பதே நல்ல இலக்கியம். எந்த மலையில் முட்டியபோதும் காற்று நின்றுபோவதில்லை; பாறைகளைக்கண்ட நதி பயணத்தில் உறைந்து போவதில்லை. எந்தத் துயரத்திலும் மனித வாழ்க்கை முடிந்துபோவதில்லை. என் கதைகளின் அடிநாதமே மனிதகுலத்தின் நம்பிக்கைதான். 

மலேசியாவில் தமிழர்களின் மக்கள்தொகை குறைந்துகொண்டு போவதும் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை சரிந்துகொண்டு போவதும் எனக்கு கவலையளிக்கின்றன. பெற்றோர்களே, மொழியை இழந்து விட்டால் உங்கள் பிள்ளைகள் உறவுகளை இழந்து விடக்கூடும். எனவே உங்கள் பிள்ளைகளைக் கட்டாயமாகத் தமிழ் படிக்கவிடுங்கள். 

வாழ்க்கை என்பது கொண்டாட்டம். மனவளம், பொருள்வளம், உடல்நலம் மூன்றும் செழித்திருக்கும் நாட்டில்தான் வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும். மொழியால் கலையால் இலக்கியத்தால் வாழ்வைக் கொண்டாடுங்கள். பழைய தலைமுறை அனுபவத்தில் பழுத்திருக்கிறது. புதிய தலைமுறை அறிவில் செழித்திருக்கிறது. அனுபவம்-அறிவு இரண்டையும் கூட்டுங்கள். உலக மக்களோடு போட்டியிடத்தக்க இனமாகத் தமிழினம் வளரும். 

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். 

விழாவுக்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் பெ.ராஜேந்திரன், டத்தோ சங்கரன், டத்தோ சகாதேவன், கேசவன், தாமசேகரன், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மன்னர் மன்னன், பேராசிரியர் கார்த்திகேசு ஆகியோர் செய்திருந்தனர்.