அண்மையில் ரமாடி நகரைக் கைப்பற்றிய ஈராக் ராணுவத்தை பழி தீர்க்கும் வகையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலால் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மட்டும் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள ஜவஹாரா வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் சுட்டுக்கொல்லபட்டனர். 22-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலுக்கு பின்னர் நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் கிழக்குப் பகுதியில் உள்ள முக்தாதியா நகரில் 20 பேரும், பாக்தாத்தின் புறநகர் பகுதியில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் வணிக வளாக தாக்குதலில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாக்தாத் வணிக வளாக துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் மற்ற தாக்குதலையும் அவர்களே நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் சம்பவங்களில் பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிகை மேலும் உயரகூடும் என்று அஞ்சப்படுகிறது.