எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட ஒருவர் உயிர் தப்புவதே அரிதான சம்பவமாக இருக்கும் நிலையில், அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள புரூலியா நகரில் ஹிமானி மாஞ்சி(45) என்ற பெண், தீதாநகர் செல்லும் ரெயிலைப் பிடிப்பதற்காக நேற்று புரூலியா ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, கற்கள் இடறியதால் திடீரென தண்டவாளத்திற்கு இடையில் விழுந்துவிட்டார். எதிரில் வேகமாய் வரும் ரெயிலைப் பார்த்து திகைத்த அவர் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சிலை போல் உறைந்து நின்றார்.
அப்போது, அந்தத் தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்ததைக் கண்ட பயணிகளும், பொதுமக்களும், அவரை அப்படியே படுத்திருக்குமாறு சைகையில் கூறினார்கள். 56 பெட்டிகளைக் கொண்ட அந்தச் சரக்கு ரெயில் கடந்து சென்ற பிறகு, சிறு காயங்களுடன் ஹிமானி மாஞ்சி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீதாநகருக்கு அவர் ரயிலில் புறப்பட்டுச் சென்றதாக ரெயில் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.