இனப் பிரச்சினைக்கு இலங்கைக்குள் ஒரு தீர்வை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது : சிவாஜிலிங்கம் !

இனப் பிரச்சினைக்கு இலங்கைக்குள் ஒரு தீர்வை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது. மூன்றாந்தரப்பு மத்தியஸ்தின் மூலமே இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் திங்கட் கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

sivajilingam-1-e1428478304221

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவரை மாத்திரம் விடுவித்துவிட்டு  மற்றவர்களை விடுவிக்காது ஏமாற்றியுள்ளார்கள்.

ஓர் அரசாங்கம் உருவாகி 100 நாட்களுக்குள் செய்யும் விடயங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்காது. ஏனெனில் அரசாங்கத்திற்கு காலக்கெடு கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் 365 நாட்கள் காத்திருந்தும் எவ்வித பயனும் இல்லை.

20 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர். அதில் இறுதி யுத்தத்தில் 8000 போராளிகள் சரணடைந்து காணாமற் போயுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். 

200 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மக்களின் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அவை அகற்றப்பட வேண்டும்.

தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பை ஏன் செய்கின்றனர்? இன்னொரு நாட்டுக்கு கூலிப்படையாக இலங்கை இராணுவத்தினர் செல்லவிருக்கின்றனரா? அரசாங்கம் இதனைக் கைவிடவேண்டும். 

அனைத்தையும், உடனேயே செய்யுங்கள் என்று கூறவில்லை. படிப்படியாக ஒவ்வொன்றையும் செய்யுங்கள். அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யுங்கள். இல்லாவிடின் அரசாங்கம் கூறியது போலஇ, 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள். அதனை விடுத்து அரசியல் கைதிகளே இல்லையெனக் கூறாதீர்கள்.

இவற்றை எல்லாம் செய்யாத இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 13ம் திகதி யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கறுப்பு கொடி போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம்.

எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக அன்றைய தினம் போராட்டம் நடாத்தவே திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால் அன்றைய தினம் காணிகளை விடுவிப்பார்கள் என சிலர் தெரிவிக்கின்றார்கள் அதனால் விடுவிக்க உள்ள காணிகளை விடுவிப்பதனை குழப்ப விரும்பாததால் தான் நாம் இந்த போராட்டத்தை 13ம் திகதி முன்னெடுக்க தீர்மானித்து உள்ளோம் என தெரிவித்தார்.