நவமணி அலுவலகம் தாக்குதல் சம்பவம்
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம்
சுலைமான் றாபி
ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளின் விடாமுயற்சியின் மற்றுமொரு முயற்சிதான் நவமணி செய்தித் தாபனம் தாக்கப்பட்டமையாகும் என நவமணி அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் கலாபூஷணம், கலை, இலக்கிய வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் விடுத்துள்ள கண்டண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்தினாலும் வர்க்க முரண்பாட்டினாலும் செயற்படுத்த முடியாமற் போன நீறு பூத்த காரியங்களை இனக்குரோதத்தால் சாதிக்க முற்படும் சக்திகள் நிச்சயம் தமது முயற்சியில் முதுகெலும்பால் முறிக்கப்படுவர்.
நல்லாட்சியின் மூலம் சமூக விழுமியங்கள் உயிர்ப்பித்து உசுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முருங்கை மரத்தில் படர்ந்திருக்கும் மயிர்க்குட்டிகள் போன்று அருகில் செல்வோரை மயிர்க்கூச்செறியச் செய்யும் நிலை ஓலைக் கூந்தலினால் தாவப்படும் புகைக்கு ஈடு கொடுக்க முடியாமற் சுருண்டு விழுந்து கருகுவதைப் போல் ஆகும். என்பதை ஊடகத்துறை மீதும் கடந்து சென்ற வரலாற்று அடிச்சுவடுகளைக் கண்டறிந்து அனுபவப்பட்டவர்களினதும் நம்பிக்கையாகும்.
ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் எண்ண வெளிப்பாடுகளை அடக்கி ஒடுக்க நினைத்தவர்கள் அடைந்து கொண்ட தோல்வியின் ஓராண்டு நிறைவின் சதி நாசகார வேலைகள் பௌதீக வளங்களை சேதப்படுத்தமே தவிர உள்ளத்திலிருந்து பீறிப்பாயும் உணர்வுகளை ஒரு போதும் காயப்படுத்த மாட்டாது.
இன்ஷா அல்லாஹ் நவமணியின் எழுச்சி அதன் வளர்ச்சி சமூக மேலாண்மைக்கான அது தேர்ந்தெடுத்துச் செல்லும் பாதையில் எவ்வித தடங்கல்கள் வந்தாலும் அதனை தூக்கி விடுவதற்கு லட்சோப லட்சம் கரங்கள் பிணைந்து கொள்ளும் என்பதில் அபார நம்பிக்கை உண்டு.