(வீடியோ) எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 140 பேர் படுகொலை !

_87402251_gettyimages-501780026

ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடு, எத்தியோப்பியா. ஆர்மினியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா. விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த நகரத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ஒரோமியா பிராந்தியத்தில் பல நகரங்களில் இருந்து விளைநிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது. ஆனால் இந்த ஒரோமியா பகுதி, நாட்டின் மிகப்பெரிய இனமான ஒரோமா இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிற பகுதி ஆகும். 

தலைநகரத்தை விஸ்தரிப்பதற்காக இந்த ஒரோமியா பிராந்தியத்தில் விவசாய நிலங்களை எடுப்பதற்கு எதிராக ஒரோமா இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி விட்டால், தாங்கள் இடம் பெயர வேண்டிய நிலை வந்து விடும் என விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

ETHIOPIANS-PROTEST
இதையடுத்து அரசின் திட்டத்துக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் மாணவர்கள் முதலில் போராட தொடங்கினார்கள். பின்னர் பல தரப்பினரும் போராட தொடங்கினர். எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் போராட தொடங்கினார்கள். ஆனால் அங்குள்ள அரசு இந்த போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தொடங்கியது. 

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஈவிரக்கமின்றி பாதுகாப்பு படையினரைக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்த வைத்தது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை அங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதன் நிர்வாகிகளில் ஒருவரான பெலிக்ஸ் ஹார்ன் கூறும்போது, “2005 தேர்தல் வன்முறைக்கு பிறகு இப்போதுதான் பெரிய அளவில் எத்தியோப்பியாவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தலைநகரத்தை விரிவுபடுத்த விவசாய நிலங்களை எடுப்பதை கண்டித்து அமைதியான முறையில் நடத்திய போராட்டங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதின் நிமித்தமாக 140 பேர் 
கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்” என்றார். ஆனால் அரசு தரப்பிலோ போராட்டம் நடத்தியவர்களில் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இப்போது 140 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் கூறி இருப்பது குறித்து அரசு கருத்து எதுவும் வெளியிடவில்லை. 

இதே நிலை நீடித்தால் எத்தியோப்பியாவின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என பெலிக்ஸ் ஹார்ன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.