காஷ்மீரில் தற்காலிக ஜனாதிபதி ஆட்சி ? மெகபூபா 11ம் திகதி முதல்–மந்திரியாக பதவி ஏற்பார் !

_79903134_161340610

காஷ்மீர் முதல்– மந்திரியாக இருந்த முப்தி முகமது சயீத் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை காலை மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து காஷ்மீர் புதிய முதல்– மந்திரியாக முப்தி முகமது சயீத்தின் மகள் மெகபூபாவை மக்கள் ஜனநாயக கட்சி தேர்வு செய்துள்ளது.

மெகபூபா உடனடியாக முதல்–மந்திரி பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது குடும்ப வழக்கப்படி 4 நாள் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், மெகபூபா பதவி ஏற்கவில்லை.

இதனால் அரசியல் சாசன நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் காஷ்மீரில் இன்றும், நாளையும் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மெகபூபா குடும்பத்தினர் கடைபிடிக்கும் 4 நாள் துக்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை)யுடன் நிறைவு பெறுகிறது. எனவே மெகபூபா 11–ந்தேதி திங்கட்கிழமை காஷ்மீர் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது.

56 வயதாகும் மெகபூபா, காஷ்மீரின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

என்றாலும் மெகபூபாவுக்கு பா.ஜ.க. சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு பிறகு சுழற்சி முறையில் முதல்–மந்திரி பதவி பா.ஜ.க.வுக்கு தரப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநில கவர்னர் ஆர்.என்.வோரா நேற்று மெகபூபாவுக்கும், காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் சத்பால் சர்மாவுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பினார். அதில் அவர், புதிய ஆட்சி அமைக்கும் விஷயத்தில் இரு தரப்பினரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

எனவே திங்கட்கிழமை காலை பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். அதில் மெகபூபாவை முதல்வராக தேர்வு செய்து, அந்த கடிதம் கவர்னரிடம் கொடுக்கப்படும். அதன்பிறகு கவர்னர் மிக எளிய விழா நடத்தி மெகபூபாவுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.