வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தரொருவர் இன்று சடலமாக மீட்பு !

deadbody

எப்.முபாரக் 

 கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு எட்டு மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தரொருவர் இன்று சனிக்கிழமை (9) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முகம்மது சபருள்ளா (வயது 50) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியரான இவர், பிரபல பாடகருமாவார்.

ஓய்வு நேரங்களில் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஆற்றில் வலை வீசி மீன்பிடித்து, கறிக்கான தனது  வீட்டுச் செலவை சமாளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேற்றும் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலையில் இருந்து பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு சடலத்தை கண்டெடுத்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், இவரது மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

1990ஆம் ஆண்டு இலங்கை வானொலி வர்த்தக சேவையில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட பாட்டுக்குப் பாட்டு போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.