நன்ணீர் மீன்பிடியாளர்கள் சங்கத்தினருக்கும் மாகாண அமைச்சர்களுக்குமிடையில் சந்திப்பு !

2_Fotor

அபு அலா 

இறக்காமம் பிரதேச நன்ணீர் மீன்பிடியாளர்களின் 2030 ஏக்கராக இருந்த இறக்காமக் குளம் 2006 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளினால் சுவிகரிக்கப்பட்டு தற்போது 1800 ஏக்கர் குளம் மட்டுமே மிஞ்சியுள்ளதாகவும், காலப்போக்கில் இக்குளம் இல்லாமல் போவதற்குரிய பாரிய அபாயம் தோன்றிக்காணப்படுவதாகவும் இறக்காமம் பிரதேச நன்ணீர் மீன்பிடியாளர் சங்கங்கள் தெரிக்கின்றது.

 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உள்ளிட்ட இறக்காமம் பிரதேச நன்ணீர் மீன்பிடியாளர்கள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (08) இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது சங்கத்தின் தலைவர்களினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

3_Fotor

இச்சந்திப்பில், இலுக்குச்சேனை மீனவர் சங்கம், இறக்காமம் 1 தொடக்கம் 9 வரையிலான மீனவர் சங்கம், சம்மாந்துறை “ஏ” புலக் மீனவர் சங்கம், இறக்காமம் ஹூதா மீனவர் சங்கம் என 4 சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் பிரச்சினைகளை அமைச்சர்களிடம் முன்வைத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தாங்கள் இறக்காமக் குளத்தில் மீன் பிடிப்பதற்கான சகல பதிவுகளையும் மேற்கொண்டு அதன் மூலம் மீன்களை பிடித்து வருகின்றோம். பதிவுகள் எதுவுமே செய்யாத பலர் இக்குளத்தில் மீன்பிடித்து வருவதால் தங்களுக்கு 3 கிலோவுக்கு மேற்பட்ட மீன்கள் ஒரு நாளைக்கு பிடிபடுவது என்பது மிக அரிதாகவே உள்ளது எனவும் நாங்கள் இக்குளத்தை நம்பியே தங்களின் அன்றாட குடும்ப வாழ்க்கையை நடாத்தியும் வருகின்றோம்.

இக்குளத்தை நம்பி 500 மீனவர்களின் மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், எங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளைப்பற்றி கடந்த காலங்களில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த 3 அமைச்சர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவில்லை என்று இலுக்குச்சேனை மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இறக்காமம் ஹூதா மீனவர் சங்கத்தின் தலைவர் கூறுகையில்,

விவசாயிகளினால் சுவிகரிக்கப்பட்ட 230 ஏக்கரை மீள பெற்றுத்தருமாறும், பதிவு செய்த மீன்பிடிச் சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் மாத்திரம் இக்குளத்தில் மீன்பிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தாங்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கான நடவடிக்கைகளுடன் தங்களுக்கான மீன்பிடி இறங்குதுறை ஒன்றும் அமைத்துத்தரவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்.

இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கூறுகையில்,

மாகாண அதிகாரத்துக்குக் கீழுள்ள எப்பிரச்சினையாக இருந்தாலும் அப்பிரச்சினைகளை மாகாண அரசுடம் மத்திய அரசு கலந்துகொண்டு பேசி அதற்கான தீர்மானங்களை எடுக்கப்படவேண்டும். இது அவ்வாறில்லாமல் ஒரு ஒழுங்கீனமற்ற முறையில் எல்லா விடயங்களிலும் மத்தியரசு தலையிட்டு வருகின்றது.

இவைகள் ஒரு பக்கமிருக்க, உங்களின் பிரச்சினைகள் தொடர்பாக இறக்காமம் பிரதேசத்திலுள்ள சகல மினவச் சங்கங்களின் தலைவர், செயலாளர்களை மிக விரைவில் திருகோணமலைக்கு அழைத்து இது தொடர்பான சகல உயரதிகாரிகளுடனான சந்திப்பொன்றையும் நடாத்தி இறக்காமக் குளத்தின் எல்லை நிர்ணயத்தையும், அதன் சட்ட நுணுக்கங்களையும் அறிந்து அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதுடன், இக்குளத்தில் மீன் குஞ்சுகளை விடுவதற்கு மீன் குஞ்சுகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

nazeer

thurai ratnasingham