சீனா செல்கின்றார் மஹிந்த !

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி சீனாவுக்குச் செல்லவுள்ளார்.

இந்தத் தகவலை அவரின் ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட உறுதிப்படுத்தினார். 

ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கிறார் என்றும் அவர் கூறினார். எனினும், மஹிந்த ராஜபக்ச அரசியல் மட்டத்திலான சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார் என அறியமுடிகின்றது. 

mahintha rajapakse
அவரது பயண நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மிகவும் இரகசியமான முறையில் நிகழ்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. 

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். 

மஹிந்த ஆட்சியின் வெளிவிவகாரக் கொள்கையில் சீனாவுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டது. அந்நாட்டுடன் முக்கிய உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்பட்டன. 

இதனால் அயல்நாடான இந்தியா மஹிந்த ஆட்சிமீது கடும் சீற்றத்தில் இருந்தது. சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு வந்த விவகாரம் டில்லியைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், மஹிந்த ஆட்சியின்போது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு சீனா பெரிதும் உதவி வந்தது. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதுடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானங்களையும் கடுமையாக எதிர்த்து வாக்களித்தது. 

மஹிந்த ஆட்சியின்போது 2014ம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஜிங் பிங் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயணத்தின் போது தான் கொழும்பு துறைமுக நகர்த்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் சீனாவின் உதவியுடன் மஹிந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு துறைமுகத் திட்டத்தை புதிய அரசு நிறுத்தியதால் பீஜீங் அதிருப்தியடைந்தது. 

தொடர் இராஜதந்திர சந்திப்புகளையும் நடத்தியது. தற்போது இருநாட்டுக்கும் இடையிலான உறவு சுமுகமடைந்து வருகின்றது. 

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மஹிந்தவின் சீனா விஜயம் அமைகின்றது.