பிரதான தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தல் நடைபெறும்.
இவ்விழாவின் பிரதான சொற்பொழிவை இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவரான மகாத்மா காந்தியின் பேரன் கோபால்கிருஷ்ணா காந்தி நிகழ்த்தவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், அழைக்கப்பட்ட அதிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
‘ஒரே நாடு – மாபெரும் பலம்’ எனும் நூல் வெளியீடும் இதன்போது இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி நிகழ்த்தப்படும் விசேட மதவழிபாடு இன்று காலை 7 மணிக்கு களுத்துறை விகாரை அருகே ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் களுத்துறை வரலாற்று சிறப்பு வாய்ந்த போதி மகான் வீற்றிருக்கும் பூமியை களுத்துறை விகாரையின் நம்பிக்கைச் சபையிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, காலஞ்சென்ற பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 117வது சிரார்த்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுதின விழா இன்று முற்பகல் 9 மணிக்கு காலி முகத்திடலில் அமையப்பெற்றுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு அருகில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து கோட்டே ஸ்ரீ நாக விகாரைக்கு வருகை தரும் ஜனாதிபதி, ஜனநாயக ஆட்சிக்காக அரும்பாடுபட்ட காலம்சென்ற வண. மாதுலுவாவே சோபித தேரருக்காக மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
அதேவேளை, பொதுமக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக சமர்ப்பிக்க முடியுமான ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ மற்றும் ‘ஜனாதிபதியின் இதயபூமி’ நிகழ்ச்சி என்பவற்றை ஆரம்பித்தல் இன்று முற்பகல் 11 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள், நாட்டு மக்களுக்கு சௌகரியமான வாழ்வை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி வழங்கும் அறிவுறுத்தல்கள் என்பன உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுபற்றி கண்டறிவதற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள ‘அபிவிருத்தி மதிப்பீட்டுப் பணியகத்தை’ இதன்போது ஜனாதிபதி ஆரம்பித்துவைப்பார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெறும் தர்மபோதனை இன்றிரவு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால நாடாளுமன்றத்தில் முக்கிய உரையாற்றவுள்ளார்.