இராமரும் அனுமனும் இணைந்து இலங்கைக்குப் பலவந்தமாக பாலம் அமைத்தனர் : உதய கம்மன்பில !

இராமரும், அனுமனும் அன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பலவந்தமாக பாலம் அமைத்து இலங்கையை ஆக்கிரமித்தனர். மீண்டும் இவ்வாறானதொரு ஆக்கிரமிப்புக்காகவா அனுமன் பாலம் அமைக்கப்படுகின்றது என்று சந்தேகம் எழுப்பியுள்ளது மஹிந்த ஆதரவு அணி.

கூட்டு எதிரணி எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியினர் நேற்றுக் கொழும்பிலுள்ள என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர். 

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே புதிய ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.  

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: 

uthaya

அனுமன் பாலம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த எனக்கு எதிராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

இலங்கையுடன் பேச்சு நடத்தப்பட்டு குறித்த பாலம் அமைக்கப்படும் என்று இந்திய அமைச்சர் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இதைத் தான் நான் சுட்டிக்காட்டினேன். 

ஆனால், “இப்படியொரு பாலம் அமைக்கப்படாது. இதுபற்றி பேச்சு நடத்தப்படவில்லை. இலங்கை பிரதமரை நம்பாது கம்மன்பில இந்திய அமைச்சரை நம்புவது ஏன்?” என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்திய அமைச்சர் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுதிமொழி வழங்கினால் அது மீறப்படாது. ஆனால், இங்கு அப்படியில்லை. 

நாடாளுமன்றத்தில் பொய் கூறுவதை எமது பிரதமர் வழமையாகக் கொண்டுள்ளார். 100 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனக் கூறியிருந்தார்.

நடத்தப்பட்டதா? பட்ஜட்டில் பல திருத்தங்களை முன்வைத்தார். அவை நடைமுறைப்படுத்தப்பட்டனவா? இறுதியில் ரவியின் பட்ஜட் அப்படியே நிறைவேற்றப்பட்டது. 

அனுமன் பாலம்’ திட்டம் அமைக்கும் பணி மார்ச்சில் ஆரம்பமாகும் என்றும், இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் கோரப்பட்டுள்ளது என்றும் இந்திய அமைச்சர் கூறியுள்ளார். 

சுற்றாடல் அறிக்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின் பாலம் அமைக்கும் பணி இப்போது ஆரம்பமாகியிருக்கும். 

பாலம் அமைப்பது பற்றி பேச்சு நடத்தப்படவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுவது உண்மையாக இருந்தால் சரி. அது பொய்யாக இருந்தால்தான் பிரச்சினை. 

காரணம், இலங்கையுடன் பேச்சு நடத்தாது, எவ்வித முன்னறிவித்தல்களையும் விடுக்காது இந்தியா பாலம் அமைக்க முயற்சிக்கிறது என்பது அதன்மூலம் புலனாகும். இதை இந்தியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது. 

இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் இற்றைக்கு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இராமரும் அனுமனும் இணைந்து இலங்கைக்குப் பலவந்தமாக பாலம் அமைத்தனர். 

அவ்வழியாக வந்துதான் இராமர் இலங்கையை ஆக்கிரமித்தார். தனது விசுவாசியான விபூஷணனுக்கு ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். 

வாலில் தீமூட்டிக்கொண்டு இந்தப் பாலத்தினூடாக வந்துதான் அனுமன் இலங்கைக்குத் தீ வைத்தார். எனவே, மீண்டுமொரு இராமாயணத்தை எமக்கு நினைவூட்ட விரும்புகிறார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல – என்றார். 

அதேவேளை, தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில், ‘அனுமன் பாலம்’ அமைக்கும் இந்தியாவின் திட்டம் தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.