றியாஸ் ஆதம்
முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகளையும், அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 விதவைக் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு ஐயங்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.எம். ஜௌபர் தலைமையில் அண்மையி;ல் நடைபெற்றது இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரவிக்கையில்,
மழை காலம் வந்துவிட்டால் உங்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்ட்டுவிடும் என்று நான் நன்கறிவேன் அதிலும் குறிப்பாக விதவையாகிய நீங்கள் எதுவித வருமானமுமின்றி தவிப்பதாக அறிந்தேன் அதன் காரணமாகவேதான் இந்த உலர் உணவுப் பொருட்களை உங்கள் காலடியில் கொண்டு வந்திருக்கின்றேன். ஆனால் சில அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் உங்கள் காலடிக்கு வந்து உங்களது வாக்குகளைச் சூறையாடிச் செல்வார்கள் அதன் பிறகு நீங்கள் படுகின்ற கஷ்டங்களை கவனத்திற் கொள்ளமாட்டார்கள் பின்னர் மீண்டும் ஒரு தேர்தல் வருகின்ற போது உங்களுக்கொரு கப்பத்தைக் கொடுத்து வாக்குகளை சுவீகரித்துக்கொள்வார்கள். நான் தேர்தல் காலங்களில் எந்தவொரு விநியோகமும் செய்ததில்லை தற்போது இது அரசியல் காலமுமில்லை நாங்கள் தற்போது எழை மக்களின் நலன் கருதி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக மலர்ந்திருக்கின்ற புத்தாண்டில் எமது நாட்டின் இனப்பிரச்சிணை விடயத்தில் முக்கியமான திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என எதிதுபார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தில் இனப்பிரச்சிணைக்கு தீர்வு எட்டப்படுமென்று தமிழ் சமூகம் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது. இருந்தாலும் எமது நாட்டினுடைய வெளிநாட்டு அமைச்சர் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிலே ஒரு புதிய அரசியலமைப்பை நிறுவி அதனூடாக இனப்பிரச்சிணைக்கான தீர்வினை வழங்குவோம் என உறுதிமொழி வழங்கியிருக்கின்றார். அந்த அடிப்படையில் புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் எமது முஸ்லிம் கட்சிகள் கட்சிபேதம் மறந்து ஒற்றமையாக செயற்பட வேண்டும் காரணம் கடந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போதும் அதேபோன்று விடுதலைப் புலிகள் அரசு பேச்சு வார்த்தைகளின் போதும் எமது சமூகம் புறக்கனிக்கப்பட்டிருந்தது அந்த வரலாற்றுத் தவறுக்கான காரணம் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையேயாகும்.
ஆனால் இன்று பார்க்கின்ற போது வட கிழக்குக்கு வெளியே வாழுகின்ற 16 இலட்சம் தமிழ் மக்களுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றினைந்து முற்போக்கு முன்னனி ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள் அந்தக் குழுவிலே பல்கலைக் கழக பேராசிரியர்கள், புத்திஜீவிகள் என பலரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த அரசியலமைப்பு சம்மந்தமாக விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
ஆகவே இலங்கையில் வாழுகின்ற 22 இலட்சம் முஸ்லிம் மக்களுடைய அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்சி பேதங்களை மறந்து இந்த உத்தேச அரசியலமைப்பு தீர்வுத்திட்டத்தில் இணைந்து முஸ்லிம் புத்திஜீவிகளையும் இணைத்து செயற்பட வேண்டியதை எமது முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.
அத்துடன் முழு பாராளுமன்றத்தையும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை ஜனாதிபதி அவர்கள் எதிர்வரும் தினங்களில் அறிவிப்புச் செய்யவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.