இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் கொடஹேவாவும் கைதுசெய்யப்பட்டமைக்கு சட்ட அடிப்படையில்லை !

புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது என்று விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
wimal-weerawansa

வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவாவையும் நேற்று சென்று சந்தித்த விமல் வீரவன்ச, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் கொடஹேவாவும் கைதுசெய்யப்பட்டமைக்கு சட்ட அடிப்படையில்லை என்று இதன்போது விமல் வீரவன்ச குறிப்பிட்டார். 

இராணுவ புலனாய்வாளர்கள், புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்தவும், அரசாங்கத்தை விமர்சனம் செய்தமைக்காக நாலக கொடஹேவாவும் கைது செய்யப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும், முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸூம் உடனிருந்தனர். 

அரசாங்கத்தின் எதிரிகளை அடக்கவே நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தினார்