சீனாவின் மக்கள் குடியரசுக் கட்சியின் தந்தையாகக் கருதப்படும் மாவோ சே துங்குக்கு, அங்குள்ள கம்யூனிச அரசு தங்கச்சிலை ஒன்றினை ஏற்கனவே திறந்துள்ளது. 32 அங்குல உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட இந்தத் தங்கச்சிலை சீனாவின் தெற்குப்பகுதி நகரமான ஷென்ஷெனில் கடந்த 13-12-2013 அன்று திறக்கப்பட்டு பின்னர், அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இங்குள்ள ஹெனான் மாகாணத்தின் கைபெங் நகர் அருகில் 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் 30 லட்சம் யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் மூன்று கோடி ரூபாய்) செலவில் மாவோவுக்கு பிரமாண்டமான தங்க நிற சிலையை உருவாக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. இரும்பு மற்றும் கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட இந்த சிலைக்கு தங்க நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த சிலையை அமைக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், இது வேண்டாத வேலை, விரயச் செலவு என ஒருதரப்பினர் சலித்துக் கொள்கின்றனர்.
1976-ம் ஆண்டுவரை சீனாவை ஆட்சி செய்துவந்த மாவோ சே துங்கின் தவறான பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளால் சீனாவில் வறட்சி, பசி, பஞ்சம், பட்டினியால் சுமார் நான்கரை கோடி மக்கள் பலியானதாக ஒரு குற்றச்சாட்டும் சீன மக்களிடையே நிலவிவருவதும், அதற்குமாறாக, சீனாவை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முன்னேறி உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர் என்ற கருத்தும் மற்றொரு தரப்பினரால் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.