சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து டோனி !

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து 34 வயதான டோனியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘இப்போது ஆஸ்திரேலிய தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை மீது கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரத்தில் ஓய்வு குறித்து சிந்திப்பேன்’ என்று பதில் அளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 12-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது.

Yuvraj-needed-t11269

இதையொட்டி டோனி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். முன்னதாக டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சிந்தித்து செயல்படக்கூடிய புத்தி கூர்மையான ஒரு கிரிக்கெட் வீரர். அவரது பந்து வீச்சு கொஞ்சம் சோடை போன சமயத்தில், அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவர் நல்ல நிலைக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்திய கிரிக்கெட்டின் சொத்து. எந்த சூழ்நிலையிலும் அவரை பயன்படுத்த முடியும். அவரை முதல் 10 ஓவர்களில் அல்லது இறுதிகட்டத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படாத போது, எனது பணியை ஓரளவு குறைக்கக்கூடியவர் அவர் தான். அவர் அணியில் இருப்பதால் நான் நிம்மதி அடைகிறேன்.

இந்திய துணை கண்டத்தை காட்டிலும் வெளிநாட்டில் உள்ள ஆடுகளத்தன்மை வேறு. சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டிலும் வித்தியாசத்தை பார்க்க முடியும். அஸ்வின் எங்களது பிரதான சுழற்பந்து வீச்சாளர். ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியிருப்பதும் நல்ல விஷயம். ஒரு இடத்திற்கு இந்த இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் முகமது ஷமி சிறப்பாக செயல்படுவார். காயத்தில் இருந்து மீள்வதற்கு கடினமாக உழைத்து இருக்கிறார். உடல் தகுதியை நிரூபிக்க உள்ளூர் கிரிக்கெட்டிலும் ஆடியிருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பை போட்டி நெருங்கி வருவதால், அவருக்கு சுமை கொடுக்காமல் எப்படி பயன்படுத்த முடியும் என்பதை பார்க்க வேண்டும்.

20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருப்பது மனநிறைவு தருகிறது. ஆஸ்திரேலியா மிகவும் சவால் மிகுந்த அணி. ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக விளையாடும் போது எப்போதும் அனுபவமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். அத்துடன் அணியில் உள்ள இளம் வீரர்கள் எப்படி தங்களது திறமையை வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். இளம் வீரர்களுக்கு திறமையை நிரூபிக்க இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.

மேலும் ஒரு நாள் தொடருக்கு பிறகு இந்த மூன்று 20 ஓவர் போட்டிகளும் நடக்க இருப்பது நல்ல விஷயம். ஏனெனில் வீரர்களை வெவ்வேறு வரிசையில் பயன்படுத்தி பார்க்க முயற்சிப்போம். அதன் பிறகு 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக சரியான லெவன் அணியை அடையாளம் காண முடியும். அடுத்த மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானது.

இவ்வாறு டோனி கூறினார்.