வலுக்கும் மோதல் : ஈரானுடனான விமான போக்குவரத்து, வர்த்தகத்துக்கு தடை விதித்தது சவுதி !

சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியா பிரிவு மத தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் கடும் போராட்டம் வெடித்தது. 
ShowImage

போராட்டத்தின் போது, டெஹ்ரானில் உள்ள சவூதி அரேபிய தூதரம் தாக்கப்பட்டது. தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த தூதரகத்தில் அதிகாரிகளோ, ஊழியர்களோ இல்லை என்பதால் அவர்கள் தப்பித்தனர். 

தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சவுதி அரேபியா, ஈரானுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்து உள்ளது. மேலும், ஈரானுடனான விமான போக்குவரத்து, வணிக தொடர்புகளுக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது. அதேபோல், தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல கூடாது எனவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அதெல்-அல்-ஜூபைர் ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். 

அதேவேளையில் மெக்கா, மெடினா போன்ற இடங்களுக்கு ஈரானிய புனித பயணிகள் எந்த தடங்கலும் இன்றி தொடர்ந்து வரலாம் என கூறிய அதெல்- அல்-ஜூபைர், ஈரான் ஒரு சாதாரண நாடாக நடந்து கொள்ள வேண்டும். நாடுகளுக்கு இடையேயான உறவை புதுப்பிக்கும் முன்பு சர்வதேச விதிமுறைகளை அந்நாடு மதிக்க வேண்டும்” என்றார்.