சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிம்ர் அல் நிம்ர்(56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியா பிரிவு மதத் தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் கடும் போராட்டம் வெடித்தது.
போராட்டத்தின் போது, தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரம் தாக்கப்பட்டது. தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சவுதி அரேபியா, ஈரானுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும், ஈரானுடனான விமான போக்குவரத்து, வணிக தொடர்புகளுக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது. ஈரானில் உள்ள சவுதி நாட்டு தூதர்கள் உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் எனவும், இனி தங்கள் நாட்டு மக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான பகை ஒவ்வொரு மணிநேரமும் அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியா – ஈரான் நாடுகளுக்கிடையே அமைதி நிலவ அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக, சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை தொலைபேசி மூலமாக தனித்தனியாக தொடர்புகொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, இருநாடுகளுக்கிடையிலான பதற்றத்தை தணிக்க உதவுமாறும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டு கொண்டார்.