சிங்க இரத்தம் : முஸ்லீம்கள் உஷாராக வேண்டுமா?

சுலைமான் றாபி
“சிங்க இரத்தம்” எனும் பெயரைக் கேட்கும் போதே மனதிற்குள் ஒரு அருவருப்புத் தோன்றுகிறது. மனிதனில் உடம்பில் ஓடும் இரத்தம், நிறம் எல்லாம் ஒன்றுதான். ஆனால் அந்த இரத்தத்தினை மட்டும் பிரித்து அதற்கு தனியான பெயர் சூட்டுகின்றபோது அந்த இரத்தம் ஒரு இனவாதமாக அவதானிக்கப்படுகிறது. உண்மைதான் இவ்வாறானதொரு உண்மை நிலையினை தற்போது நமது நாட்டில் நாம் அது பற்றிய பேச்சுக்களை அன்றாட ஊடகங்கள் மூலமாக அறிகின்றோம்.
இழந்த ஆட்சியை இனவாதம் மூலம் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தலையணை இருக்க உறையை மட்டும் மாற்றியமைத்து இனவாதம் எனும் பெயரில் இந்நாட்டில் வாழும் முஸ்லீம்களை மீண்டும் கூறுபோட்டு அவர்களை ஒதுக்கி, அரசியல் சாயம் பூசப்பட்டுள்ள இனவாத அமைப்புக்கள் மூலம் அவர்களை நிர்க்கதியாக்க துடிக்கும் மற்றுமொரு வடிவம்தான் சிங்க லே (சிங்க  இரத்தம்) எனும் இனவாத இரத்தம் தோய்ந்த இயக்கமாகும்.
sina lay
உண்மையில் இந்த இயக்கம் அல்லது குழு எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, இதன் பின்புலம் என்ன? ஏன் முஸ்லீம்களின் வாசற்கதவுகளில் இதன் பெயர்கள் எழுதப்பட வேண்டும் இதன்மூலம் முஸ்லீம்கள் விழித்துக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி தற்போது சிந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இனங்களுக்கு இடையில் பேதங்களை உருவாக்கி அதன் மூலம் தமது இருப்புக்களை தக்கவைத்து மீண்டும் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ளலாம் எனும் மனக்கோட்டை கட்டுபவர்களிடத்தில் முஸ்லீம் சமுதாயம் எவ்வாறான அணுகுமுறைகளுடன் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களிடத்தில் உருவாகியிருக்கின்ற மிகப்பெரும் சவாலான விடயமாகும்.
உண்மையில் இந்த சிங்க இரத்தம் பௌத்த அடிப்படை வாதத்தினை போதிக்கும் முயற்சியாகவும், இந்நாட்டின் பெயரும், கொடியும் மாறவேண்டும் எனும் இனவாதத்தினை தூண்டும் முயற்சியாக உருவாக்கப்பட்ட இந்த சிங்ஹலே தற்போது நாடு முழுவதும் பெரிதாக பேசப்படுகின்ற தோன்றாக மாறிவிட்டது.
இது ஒருபுறமிருக்க எவ்வித  திரைமறைவின்றி அதன் ஸ்டிக்கர்களும் பாரியளவில் விற்பனை  செய்யப்பட்டு வாகனங்களிலும் இன்னும் இதர இடங்களிலும் ஒட்டப்பட்டு காட்சிதருகின்றன. உண்மையில் இந்த விடயங்களானது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கையும் வைத்து வாக்களித்த மக்களின் மனங்களில் ஒருவகையான ஐயப்பாட்டினை  தோற்றுவித்துள்ளதோடு, இனவாதத்தினை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அரசின் திட்டத்தின் மீதும் மக்களின் சந்தேக கண்கள் படத்துவங்கியுள்ளன.
பொதுவாக இவ்வாறான பௌத்த இனவாத செயல்கள் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைத்தாலும் நல்லாட்சி அரசின் கீழும் இதன் வேட்டுக்கள் தீர்த்துக் கொள்ளப்படுபவையாகவே இருக்கின்றது. ஆனால் இவைகளை தற்போதய அரசாங்கம் கண்டும், காணாதது போல் இருக்கின்றதா என்பதுதான் நாம் ஒவ்வொருத்தரும் நன்கு சிந்திக்க வேண்டிய கடமையாகும்.
அதேபோன்று இவ்வாறான பௌத்த இனவாதக் கொள்கைகள் தேர்தல்கள் நெருங்கிவரும் காலத்திலேயே கட்டவிழ்த்து விடப்பட்டு நன்றாக திட்டமிடப்படுகின்றதொன்றாக மாறிவருகின்றது. இவ்வாறான ஒரு பயங்கர நிலையினைத்தான் கடந்த தேர்தல்களை மையமாக வைத்து பொது பலசேனா  போன்ற அமைப்புக்கள் தோற்றம் பெற்று முஸ்லீம் சமூகத்தையும், அவர்களின் பொருளாதாரத்தையும் முடக்கி பௌத்தத்தினை பாதுகாக்கின்றோம் எனும் போர்வையில் இஸ்லாத்தினையும், முஸ்லீம்களினையும் துன்புறுத்தி ஹலால் முதல் ஹராம் வரை இந்நாட்டில்  மிகப்பெரும் இனவாத புரட்சியினை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உடமைகளும், உயிர்களும் பறிக்கப்பட்டிருந்தன. இதன் பிறகு இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு நாட்டை இனவாதத்தில் இருந்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் அடைந்தார்கள்.
1661913_1515136878786486_7505298095283301417_n
இது ஒரு புறமிருக்க நுகேகொடையில் முஸ்லிம்களின் வீடுகளின் வாயிற்கதவுகளில் சிங்க லே என்ற சொல் நேற்று முன்தினம் எழுதப்பட்டிருந்தது. இது இனவாதத்தை தூண்டும் செயல் என்று பலரும் விமர்சனம் செய்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் சிங்க லே சார்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
உண்மையில் இவ்வாறான ஆதரவுக் கருத்துக்களானது இந்நாட்டில்  வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பல்வேறு வகையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு,   இன்னொரு அழுத்கம சம்பவம் நடந்து விடக்கூட்டாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
சிங்க லே’(சிங்கத்தின் இரத்தம்) என்பது யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இன்னமும் அடையாளம் காணமுடியாத நிலையில் கண்டறியப்படாததோடு, சிங்கள இனப்பற்றுள்ளஅனைவரும் தமது வாகனங்களில், வர்த்தக நிலையங்களில் இந்த பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொழும்பில் நுகேகொட பகுதியில் முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து இந்த பெயர்கள் பொறித்த ஸ்டிக்கர்கள் விநியோகிக்கப்படுவதோடு முஸ்லிம்களின் வாசற்கதவுகளிலும், சுவர்களிலும் எழுதப்பட்டு மீண்டுமொரு அழுத்கம போன்றதொரு சம்பவமொன்றினை நாடாத்த திட்டமிடப்படுவதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர். அப்படியானதொரு துரதிஷ்டமானதொரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதிலும், அதேபோன்று சிறுபான்மைச்சமூகமாக இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் சிங்க லே என்றும் விடயத்தில் மிகவும் நிதானமாகவும், புத்திசாதூரியமாகவும் செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.
இது தவிர எடுத்ததுக்கெல்லாம் அறிக்கைகள் விடும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த சிங்க லே விடயத்தில் மிகவும் நிதானமாகவும் தூரநோக்குடனும் சிந்தித்து அறிக்கைகளை விடவேண்டும் என்பதே இந்நாட்டில் நல்லாட்சியினை விரும்புகின்ற மக்களின் விருப்பங்களாகும்.
இறுதியாக…
சிங்க இரத்தம் எனும் விடயத்தில் முஸ்லீம்கள் ஒவ்வொருத்தரும் விழிப்பாக இருப்பதோடு, அதிலும் நாம் அனைவரும் பொறுமையினைக் கடைப்பிடித்து நமது சமூகத்தை பாதுகாக்க நாமே முன்வரவேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் எதிர்பார்ப்புக்களாகும்.