ஈரானுடனான உறவை முறித்தது சவுதி : பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ரஷ்யா விருப்பம் !

ஷியா பிரிவு மதகுரு உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சவுதி அரேபியா- ஈரான் இடையே பிரச்சனை வலுத்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சனையை தீர்க்க நடுவராக செயல்பட தயார் என்று ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.

buttin russiya

ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் (56) உட்பட 47 பேருக்கு சவுதி அரசு நேற்று முன்தினம் ஒரே நாளில் மரண தண்டனையை நிறைவேற்றியது. இந்த செயலுக்கு ஷியா பிரிவினர் அதிக அளவில் வசிக்கும் ஈரான், ஈராக் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கானோர் கூடி, போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. தூதரகத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.

தூதரக அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதனால் அங்குள்ள மேஜை, நாற்காலி உள்ளிட்ட தளவாடங்கள் கொழுந்து விட்டு எரிந்தன. உள் அலங்காரங்கள் உருக்குலைந்து போயின. அங்குள்ள ஆவணங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

இதனையடுத்து, ஈரானுடனான ராஜாங்க ரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அதெல் அல்-ஜூபியர் இதனை அறிவித்தார். மேலும் சவுதியில் உள்ள ஈரான் தூதரகத்தில் இருந்து அனைவரையும் 48 மணி நேரத்தில் வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி மற்றும் ஈரான் நாடுகளிடையே முற்றிவரும் பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தராக செயல்பட தயார் என்று ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், “தேவைப்பட்டால் ஒரு நடுநிலை அங்கம் வகிக்க ஒரு நண்பனை போல இந்த விவகாரத்தில் செயல்பட தயாராக உள்ளோம்” என்று ரஷ்ய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.