ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றுகின்ற அனைவரும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் !

அனைத்து அரச நிறுவனங்களின் தலைமையகமான ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றுகின்ற அனைவரும் ஊழல், வீண்விரயம் என்பவற்றை தவிர்த்து மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வருட ஆரம்பத்தில் வடமத்திய மாகாணத்தில் உத்தியோகபூர்வ நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன், ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளையும் அவர் இன்று ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

President , maithri

தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உரிய முறையில் மேற்கொள்வதற்கு காட்டுகின்ற அக்கறை செயற்திறன் மற்றும் தொழில்தன்மை என்பன சேவைக்காலத்தில் காணப்படுகின்ற சிரேஷ்டத்துவத்தை விட அதிக பெறுமதியை கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் சேவையாற்றுவது தனக்கல்ல இந்த நாட்டு மக்களுக்கு என்பதை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச நிறுவனகங்களை நிர்வகிக்கின்ற பிரதான இடமான ஜனாதிபதி செயலகம் நாட்டு மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படுகின்ற இடமாக அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலத்தில் நாட்டில் முன்னெடுத்த பல வேலைத் திட்டங்களுக்கு ஜனாதிபதி செயலக ஊழியர்கள் வழங்கிய பங்களிப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அரச சொத்துக்களை மிகவும் அவதானமாக கையாள வேண்டும் என்பதோடு ஏனைய அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி செயலகம் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.