வில்பத்துவும் விடைபெறாத வினாக்களும் !

வில்பத்துவும் விடைபெறாத வினாக்களும்..!! பாகம் – (02)

இவ் விவாதத்தின் மூலம் அமைச்சர் றிஷாத் சாதித்தது தான் என்ன? ஹிருத் தொலைக் காட்சியுடனான முன்னைய விவாதத்தின் போதும், ஊடகவியலாளர் சுஜீவயிடம் தெளிவாக வில்பத்துவில் சட்ட விரோத குடியேற்றம் நடைபெற வில்லை என்ற விடயத்தை இதே தொலைக்காட்சியில் நிறுவி இருந்தார்.மீண்டும் அதே விடயத்தை தான் அதே தொலைக்காட்சியில் இவ் விவாதத்தின் போதும் நிறுவியுள்ளார்.விவாதம் செய்த நபர்கள் வேறு பட்டாலும் விவாதப் பொருள் ஒன்றுதான்.எனவே,வில்பத்துவில் சட்ட விரோதக் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிறுவுவதில் பயனில்லை.கொங்கிரீட் கொட்டும் போது அதனை தகுந்த விதத்தில் compact பன்ன வேண்டும்.அளவு கடந்து compact பன்னும் போது கற்கள் ஓரிடத்தில் ஒன்றிணைந்து உறுதியை குறைத்துவிடும் என்பதை அமைச்சர் றிஷாத் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழ மொழியும் உள்ளதல்லவா? விகார மகா தேவிப் பூங்காவில் வைத்து அமைச்சர் றிஷாத் குடுக் கடத்துவதாக ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டிருந்தார்.இவ் விவாதத்தின் போதும் அதே விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.ஆதாரத்தின் மூலம் நிரூபிக்கவில்லையே? என வினா எழுப்பலாம்.ஆதாரத்தை காட்டி நிரூபிக்க முயன்றிருந்தால் இருவரில் ஒருவர் பக்கம் மக்கள் தீர்ப்பு வழங்கி இருப்பார்கள்.குடு விடயத்திலும் இருவரும் எதுவும் சாதிக்கவில்லை.எனவே,இவ் விவாதத்தின் மூலம் சமூகம் பெற்ற பயன் தான் என்ன என்று கேட்டால் எதுவுமல்ல என்பதுவே பதிலாகும்.

மேலும்,இன்று இந்தத் தேரர் இது பற்றிக் கதைப்பார்.நாளை இன்னுமொருவர் கதைப்பார்.இவர்களுடன் எல்லாம் அமைச்சர் றிஷாத் விவாதம் செய்து தான் விளங்கப்படுத்தப்போகிறாரா? இப்படியே தொடர்ந்தால் நிலைமை எங்கு செல்லும் என்பதை சிந்திக்க வேண்டும்.அமைச்சர் றிஷாத் ஊடகவியலாளர் சுஜீவயிடம் வில்பத்து தொடர்பாக தெளிவாக நிறுவியும்,இன்று இந்தத் தேரர் வேறு சில ஆதாரங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்துள்ளார்.இவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இளைஞர்களும் ஒன்றிணைந்திருந்தனர்.அமைச்சர் றிஷாத்திற்கும் ஊடகவியலாளர் சுஜீவயிற்குமிடையிலான விவாதம் பயனுள்ளதாக இருந்திருப்பின் இன்று இவ்வாறானவர்கள் கோசம் எழுப்பி இருக்க மாட்டார்கள்.அதாவது அமைச்சர் றிஷாத் ஊடகவியலாளர் சுஜீவயிடம் செய்த விவாதம் சிங்கள மக்களிடத்தில் தாக்கத்தை செலுத்தவில்லை என்பதற்கு இவைகளும் ஒரு சான்று.அன்று அஷ்ரப் விவாதம் செய்த காலப்பகுதில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருந்தமையால் பேரின வாதிகளுக்கு முஸ்லிம்களை எதிர்க்க முடியாத நிலை இருந்தது.ஆனால்,இன்று இன வாதம் வெளிப்படையாக தலை விரித்தாடுகிறது.இதனையெல்லாம் சிந்தித்தே செயல்பட வேண்டும்.நிலைமை மாறு படும் போது ஒரு பிரச்சினையைத் தீர்க்க கடைப்பிடிக்கும் வழி முறையும் மாறுபடும்.

இவ் விவாதம் நடைபெற்றது ஒரு சிங்கள மதகுருவுடனாகும்.சிங்கள மக்கள் தங்கள் மத குருவுக்கு மிகவும் மதிப்பளிப்பார்கள்.இவ் விவாதத்தின் போது சலகுன நிகழ்ச்சியை நடாத்த வந்த ஊடகவியலாளர்கள் ஆனந்த சாகர தேரரை பார்த்து “தங்கள் மதகுரு” என்ற வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து அவரை தங்களால் விட்டுக்கொடுக்க முடியாது என்ற தோரணையில் பேசியதை அவதானிக்க முடிந்தது.ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நன்கு பதப்பட்டவர்களாகவும்,பரந்த அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள்.குறித்த ஊடகவியலாளர்கள் கூட தங்கள் “மத குரு” எனக் குறிப்பிட்டதானது இன வாத சிந்தனையின் உச்சமாக நோக்கலாம்.இக் கருத்தின் மறு வடிவம் “இக் குறித்த தேரர் தோற்பதானது ஒட்டு மொத்த இலங்கைச் சிங்களவர்களும் தோற்பது போன்றாகும்” என்பதாகும்.சிங்கள மத குருக்களுடன் மோதச் செல்லுவது எமது சமூகத்திற்கு பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம்.அப்படியானால் மர்ஹூம் அஷ்ரபின் விவாதம் பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்கலாம்.அஷ்ரப் ஒரு விடயத்தை செய்ததால் அது சரி என ஆகப்போவதுமில்லை.அன்றைய சூழ் நிலை வேறு இன்றைய சூழ் நிலை வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.மேலும்,இவ் மதகுரு தனது சொந்தப் பிரச்சினைக்காக இவ் விவாதத்திற்கு வரவில்லை.இலங்கைத் தேசியத்திற்கு ஆபத்து என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியே இவ் விவாதத்திற்கு வந்திருந்தார்.எனவே,இத் தேரர் தோற்பதானது ஒரு இலங்கைத் தேசியத்தின் மீது உண்மைப் பற்றுக் கொண்ட ஒருவர் தோற்பது போன்றாகும் போன்ற சிந்தனைகளை பேரின வாதிகளிடத்தில் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

இவ் விவாதம் இன வாத சிந்தனை கொண்டதல்ல.தெளிவை விளக்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகும் என சிலர் நியாயம் கற்பிக்கின்றனர்.இந்த விவாதத்தில் நடு நிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் பகிரங்கமாகவே நடு நிலை தவறி இருந்தனர்.இவர்கள் நடுநிலை தவறியமை மதச் சிந்தனை கொண்டே என்பதை யாராலும் மறுக்க முடியாது.அதாவது இவ் விவாதத்தின் போது முஸ்லிம்,சிங்களவர் என்ற இன ரீதியான இரு பிரிவுகள் உருவாகியுள்ளன.இது இனவாதத்தை கிளறுவது அல்லாமல் வேறு என்ன? இதனைப் பார்க்கும் மக்கள் எவ்வாறு இந் நிகழ்வைக் கொள்வர்? ஒரு தொலைக் காட்சி நடுநிலை தவறும் போது,அது மக்களிடத்தில் செல்லாக் காசாக மாறும்.தற்போது அரச ஊடகங்கள் கூட நடுநிலை தவறாது செயற்படுகின்றன.மத ரீதியாக நடுநிலை தவறும் போது அது மக்களிடத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற செய்தியையும் இவ் விடயம் எடுத்துக் காட்டுகிறது.அமைச்சர் றிஷாத் இவ் விவாதத்திற்கு செல்லும் போது முஸ்லிம்களுக்காக சிங்களவர்களுடன் போராடச் செல்லுகிறார் என்ற தோற்றப்பாடு எற்படுத்தப்பட்டிருந்ததை யாராலும் மறுக்க முடியாது.அப்படியானால்,இதன் மறுதலையே ஆனந்த சாகர தேரர் சிங்கள மக்களிடத்தில் ஏற்படுத்தி இருப்பார்.இன வாதத்தை தூண்டுவதற்கு இச் செயல் அழகிய அடித்தளம் வழங்கி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.மேலும்,சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மலையக பகுதி ஒன்றில் முஸ்லிம்களுக்காக விவாதிக்கச் செல்லும் அமைச்சர் றிஷாதுக்காக பிராத்திக்குமாறு பள்ளிவாயலில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.இது இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன? ஞானசார தேரர் பேசிய ஒரு பேச்சு அளுத்கமை கலவரத்திற்கே வித்திட்டதை எமது சமூகம் அவ்வளவு இலகுவில் மறந்து விடாது.

வில்பத்துவும் விடைபெறாத வினாக்களும்…!! பாகம்-(03)

த.தே.கூ தங்கள் பிரச்சினைகளை தீர்க்க அணுகும் வழி முறையில் எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் படிப்பினை பெற வேண்டியது காலத்தின் தேவையாகும்.தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில் பாரிய இனவாதக் கருத்துக்கள் தோன்றி இருந்ததை யாவரும் அறிவர்.இவ் இனவாதக் கருத்தை  த.தே.கூ மாத்திரம் எதிர்கொள்ளவில்லை.த.தே.கூ மேற்கொண்டு வருகின்ற அரசியலால் இவ் விடயத்தில் நாட்டின் முக்கிய புள்ளிகளான பிரதமர் உட்பட பலர் த.தே.கூ இற்கு ஆதரவாக பேசி இருந்தனர்.இதன் காரணமாக இன வாதக் கருத்திற்கு அவ் விடயத்தில் சாவு மணி அடிக்கப்பட்டிருந்தது.த.தே.கூ இன் செயற்பாடு இலங்கையை சர்வதேசத்தின் முன் கை கட்டச் செய்துவிடுமா? என்ற அச்சம் பரவலாக இருக்கின்றது.ஐக்கிய இலங்கைக்குள் அவர்களுக்கு தீர்வு கிடைத்தாலும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை போன்ற அவர்களது விடாப்பிடிக் கோரிக்கைகளால் இலங்கை இராணுவத் தளபதிகள் அகப்பட்டுக் கொள்ளும் நிலை உள்ளமை மறுக்க முடியாத உண்மை.இதனை ஒரு போதும் பேரின சமூகம் ஏற்றுக்கொள்ளாது.எனவே,தமிழர்களுக்கு தீர்வு கிட்டும் போது அதில் இனவாதக் கருத்துக்கள் எல்லை மீறிச் செல்லும் நிலை உள்ளமை வெளிப்படையான உண்மை.அண்மையில் த.தே.கூவின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் “இவ் வருடத்திற்குள் தங்களுக்கு தீர்வு கிடைத்து விடும்” என உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.இதனை பாராட்டி அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்தும் வெளியிட்டுள்ளார்.இங்கு இன வாதக் கருத்துக்கள் தலை விரித்தாட வேண்டும்.ஆனால்,அவ்வாறு எதனையும் காணவில்லை.இங்கு நான் குறிப்பிட வருகின்ற விடயம் என்னவென்று சொன்னால் த.தே.கூ கடைபிடிக்கும் அரசியல் கொள்கை,தீர்வுக்கு அணுகும் வழி முறைகள் இனவாதக் கருத்துக்கு சாவு அடிக்கும் விதத்தில் அமைகின்றது.அவ்வாறான அரசியலை எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கடைப்பிடிக்க வேண்டும்.

இலங்கை மக்களில் பெரும்பாலானோர் மத ரீதியாக தவறான வழி காட்டலில் உள்ளனர்.இதற்கு பல சம்பவங்களை ஆதராமாக குறிப்பிடலாம்.கிரேன்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அங்கு கடமை புரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் கை கட்டி வேடிக்கை பார்த்திருந்தனர்.அங்கு இருந்த பாதுகாப்பு படைவீரர் ஒருவர் “தனது ஆடைகளை களைந்துவிட்டு இதற்கு போராட தயார் ” எனும் விதத்தில் குறிப்பிட்டதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டிருந்தது.அளுத்கமை கலவரத்திலும் இதே நிலை இருந்தமையை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.சும்மா உள்ள பள்ளிவாயலை உடைப்பதை தவறு என உணர முடியாதவர்களாக இலங்கை சமூகம் உள்ளது.இவர்கள் இதனை எக் கண்ணோட்டம் கொண்டு பார்ப்பார்கள்? எனவே,இவ் வில்பத்து விடயமானது மிகக் கவனமாக கையாள வேண்டிய ஒரு பிரச்சினையாகும்.பொது பல சேனா பாரிய அங்கீகாரத்தை இத் தேர்தலில் பெற்றிருக்கவில்லை என்பதால் சிலர் இலங்கையில் இனவாதம் இல்லை என நிரூபிக்க வருகின்றனர்.அது ஒவ்வொரு இடத்திலும் குறித்த அளவிலான வாக்குகளைப் பெற்றுள்ளது.ஒரு சிறு தீக்குச்சி போதும் நாட்டை அழிக்க.அளுத்கமை கலவரத்தில் சூத்திரதாரிகள் ஆயிரக்கணக்கானோர் அல்ல.மிகக் குறுகிய அளவினர் தான்.

இக் குறித்த தேரர் இதற்கு முன்பு முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை வெளியிட்டதாக அறிய முடியவில்லை.இவ் விவாதத்தில் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.மேலும் இஸ்லாம் பற்றிய நச்சுக் கருத்துக்களையும் குறித்த தேரர் வெளிப்படுத்தி இருந்தார்.அதாவது வில்பத்து தொடர்பாக பேச வந்தவர் முஸ்லிம்களின் எதிரியாக மாறிச் சென்றுள்ளார்.இன்னுமொரு ஞானசார தேரரை உருவாக்குவதற்கு இவ் விவாதம் வழி சமைத்துக்கொடுத்துள்ளது.அடிபட்ட பாம்பு கடிக்காமல் விடாது என்ற முது மொழி உள்ளது.இதன் மூலம் இப் பிரச்சினை நிறைவுறுமா? என்ற வினா அடையாளம் உள்ள போதும்,அப்படி நிறைவுற்றாலும் இன்னுமொரு பிரச்சினையை தூக்கிப் பிடித்து இதற்கு பழி வாங்க நிச்சயம் முயற்சிப்பார்.இவரை சாதாரண ஒரு தேரராக முஸ்லிம்கள் கணிப்பிட்டுள்ளதான தோற்றப்பாடே முஸ்லிம்களிடத்தில் உள்ளது.இவர் பஸ்களில் தேரர்களை வில்பத்துவுக்கு அழைத்துச் சென்றவர்.எடுத்த எடுப்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்று கூட்டி ஆர்ப்பாட்டம் செய்து காட்டியவர்.தேசிய பிக்கு சங்கத்தின் செயலாளர்.ஞானசார தேரரைப் போன்று இவர் விலாசம் தெரியாதவர் அல்ல.விலாசம் தெரியாத ஞானசார தேரரால் பாரிய நாசத்தை உண்டு பண்ண முடிந்தது என்றால்,இவரை எதிர்ப்பது எமது சமூகத்திற்கு பாரிய எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தலாம் என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.

இவ் விவாதத்தில் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க அத் தேரர் அமைச்சர் றிஷாத்தின் குடும்ப சொத்துகள் பற்றிய சில விடயங்களைக் கூறினார்.இதற்கு அமைச்சர் றிஷாத் எதுவித பதிலையும் அளிக்கவில்லை.தனது குடும்ப விடயங்கள் பற்றி பேச வேண்டாம் எனக் கோரி இருந்தார்.உண்மையில் அமைச்சர் றிஷாத் தரப்பிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு இது இப்போது தேவையற்ற விடயம் போன்று விளங்கும்.அதே நேரம் அத் தேரர் தரப்பில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு “பார்த்தீர்களா! எமது தேரர் அவர் வாயை மூட வைத்துவிட்டார்.” எனச் சிந்திக்கவும் வாய்ப்புள்ளது.இதனை இன்னுமொரு விதத்திலும் நிறுவலாம்.அ.இ.ம.காவைச் சேர்த்தோர் இவ் விவாதத்தில் அமைச்சர் றிஷாத் பாரிய வெற்றியை சுவைத்துவிட்டதாக கூறுகின்றனர்.எனினும்,மு.காவினர் அமைச்சர் றிஷாத் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டதாக கூறுகின்றனர்.முஸ்லிம்களே இவ் விடயத்தில் ஒரு முடிவைப் பெற்றுக் கொள்ளத் தயங்கும் போது எப்படி பேரின வாதிகள் விளங்கிக் கொள்வார்கள் என நம்ப முடியும்? ஒரு இடத்தில் அமைச்சர் றிஷாத் உங்களிடம் ஆதாரம் இருந்தால் நீதி மன்றம் செல்லுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.அப்படியானால் இவ் விவாதம் எதற்கு? நீதி மன்றம் சென்றே தீர்த்திருக்கலாமே!

மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தி அதில் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.இந்தத் தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிந்த இவரால் ஏன் ரிஸ்வி ஜவஹர்ஷாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியவில்லை.அப்படியானால் ரிஸ்வி ஜவஹர்ஷா கூறுவதை அமைச்சர் றிஷாத் சரி என ஏற்கின்றாரா? இதே போன்று முபீன் என்பவரால் இவர் மீது வழக்குத் தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது.இவ் வழக்குத் தாக்கலுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.இது போன்று வில்பத்துவில் பல ஏக்கர் காணிகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டே குடியேற்றங்கள் இடம்பெற்றன.தங்கள் காணிகளில் இருந்த மரங்களைப் பார்த்து “இது தங்கள் காணிகளில் இருந்த மரங்கள் தானா?” என ஆச்சரியப்படுமளவு மரங்கள் இருந்ததாக அம் மக்கள் கூறியதற்கு பல பத்திரிகைச் சான்றுகள் உள்ளன.இங்கு வெட்டப்பட்ட மரங்கள் எங்கே சென்றன என்பது மிகப் பெரிய மர்மமாக உள்ளது.மரங்களை கொண்டு செல்லுதல் சாதாரண ஒன்றுமல்ல.இவ் இடத்தில் இவைகளையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.

இந்தத் தேரர் அமைச்சர் றிஷாத்தின் சொத்துக்கள் பற்றிக் கேட்ட விடயமானது பேச வந்த தலைப்புக்கு அப்பாற்பட்ட விடயம் என்ற காரணத்தால் அவர் இது பற்றி கதைக்கவில்லை என சிலர் நியாயம் கற்பிக்கின்றனர்.தன் மீது அவதூறுகள் பரப்புவதை பார்த்து அமைச்சர் றிஷாத் தங்களிடம் அழுதுவிட்டதாகவும் jaffnamuslim இணைய தளம் ஒரு செய்தியை பதிவேற்றி இருந்தது.அதாவது குறித்த அவதூறு விடயம் அமைச்சர் றிஷாத்தை பாதித்துள்ளது என்றால் மக்களிடம் கேள்விகள் எழும்பாமலா இருக்கும்? மேலும்,இவ் விவாதத்தின் ஆரம்பத்தில் அமைச்சர் றிஷாத் முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் இது விடயத்தில் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.தான் மாத்திரமே இதற்கு போராட வந்துள்ளதாக கூறுகிறார்.இவ் விடத்தில் இது அவசியம் தானா? முஸ்லிம் தலைவர்கள் மௌனித்திருப்பது மறுக்க முடியாத கேவலமான உண்மை.ஏன் இவர்கள் மௌனித்திரிக்க வேண்டும்? என ஒரு பேரின வாதி சிந்தித்தல் எவ்வ்வாறன விடையைப் பெறுவார்? இதையெல்லாம் சிந்தித்தாவது அமைச்சர் றிஷாத் எதிர்காலத்தில் தனது செயற்பாடுகளை அமைக்க வேண்டும்.

மு.கா தலைவர் எங்கே? ஆ.. என்றால் ஆயிரம் அறிக்கையும் விடும் அசாத் சாலி அமைதியாக இருப்பது ஏன்? முஜீபுர் ரஹ்மான் அமைதியாக இருப்பது ஏன்? கொழும்பு முஸ்லிம்களுக்கு ஏதும் என்றால் தான் முஜீபுர் ரஹ்மான் குரல் கொடுப்பாரா? இவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாப் போல் அமைதியாக இருப்பதன் மர்மம் துலங்கப்படாத ஒன்றாகவே உள்ளது.வில்பத்துவிற்கும் இவர்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது போன்று இருக்கின்றனர்.அமைச்சர் றிஷாத் இவ் விடயத்தை அணுகும் விதத்தை குறை கூறினாலும்,இவர் மாத்திரமே இவ் விடயத்தில் உண்மையான கரிசனை கொண்டுள்ளமையை யாவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.இவ் விடயத்தை தாங்களும் தூக்கிப் பிடித்தால் இவ் விடயம் பெரிதாகும் என சில முஸ்லிம் அரசியல் வாதிகள் நியாயம் கற்பிக்க விளையலாம்.அப்படியானால் அமைச்சர் றிஷாத்துடன் இணைந்து இவ் விடயத்தை கையாளலாமே? ஓ.. அமைச்சர் றிஷாத் பெரியாளாகி விடுவாரோ? அமைச்சர் றிஷாத்துடன் முஸ்லிம் அரசியல் வாதிகள் யாரும் இணைந்து செயல்படவில்லை என்பதை அவர் அடிக்கடி தான் மட்டுமே இவ் விடயத்தில் போராடுவதாக குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது அமைச்சர் றிஷாத்தின் தனிப்பட்ட பிரச்சினையும் அல்ல.ஒரு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை.அமைச்சர் றிஷாத்தின் மீது ஏதாவது பிழைகள் இருப்பின் அதை பகிரங்கமாக சுட்டிக் காட்டுங்கள்.இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுங்கள்.ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ் விடயத்தில் கரிசனை கொள்ள நினைத்தாலும் இது பற்றிய பூரண தெளிவுள்ள அமைச்சர் றிஷாத்துடன் இணைந்து செயலாற்றுவதே பொருத்தமானதாகும்.விமர்சனங்களின் மூலம் மனம் உடைந்து விடுபவன் ஒரு சிறந்த தலைவன் அல்ல.விமர்சனங்கள் செய்வது குறித்த செயலை இன்னும் இன்னும் வளப்படுத்துவதற்கே!

முஸ்லிம் தலைவர்களே!

எமது சமூகத்தின் கண்ணீர் துடைக்க ஒன்றிணையுங்கள்.பதவிகளைத் தருபவன் அல்லாஹ் என்பதை உள்ளத்தில் நிறுத்தி செயற்படுங்கள்.

முற்றும்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.