சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு !

செயிட் ஆஷிப்
சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த பீச் பார்க்கின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருபது இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
 
கல்முனை மாநகர சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று (31) மாலை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
 

Nizam

 
 
“சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த பீச் பார்க் நிர்மாணப் பணிகள் பெருமளவு பூர்த்தியடைந்துள்ள போதிலும் அதில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக இன்னும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவில்லை.
 
இந்த பீச் பாக்கை சில தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்று நிர்வகிப்பதற்கு முன்வந்துள்ள போதிலும் அங்கு தேவையாகவுள்ள மலசல கூடம், நீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளையும் மற்றும் சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
அதன் நிமித்தம் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக பொறியியல் பிரிவின் உத்தேச மதிப்பீட்டின் பிரகாரம் எமது 2016ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இருபது இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளோம். கூடிய விரைவில் இவ்வேலைத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும்.
 
அதுபோன்று நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்காக இந்த பட்ஜெட்டில் 20 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளோம். அவ்வேலைத் திட்டத்தையும் ஏக காலத்தில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
அதேவேளை எமது மாநகரப் பிராந்தியத்தில் இறைச்சிக்காக மாடறுப்பதற்கு பொருத்தமான விலங்கறுமனையொன்று இல்லாதிருப்பது பெரும் பிரச்சினையாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. இதனை அமைப்பதற்கும் பணம் தயாராக உள்ளது. ஆனால் பொருத்தமான இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். அதனையும் மிகக் கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
 
கல்முனை நகர ஐக்கிய சதுக்க கட்டிடத் தொகுதியின் கீழ் தளத்தில் அமைந்துள்ள 30 கடை அறைகளும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் நமது வர்த்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த கட்டிடத் தொகுதியின் மேல் மாடியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
 
பழைய தனியார் பஸ் கட்டிடம் மாத்திரம் மாநகர சபையின் வருமானத்தை கருத்தில் கொண்டு அமானா வங்கிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் சுற்று வட்டாரத்தை வாகனத் தரிப்பிடத்திற்கு வழங்கி சபைக்கு வருமானம் ஈட்டவும் திட்டமிட்டுள்ளோம்.
 
தனியார் பஸ்களை அரச போக்குவரத்து பஸ் நிலையத்துடன் ஒன்றிணைப்பு செய்வதற்கு ஏற்ப அதனை மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
 
கல்முனை மாநகர சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.