வில்பத்துவும் விடைபெறாத வினாக்களும்…!! பாகம்-(01)

1451286595_7170862_hirunews_Wilpaththu-Debate-New

பேரின வாதிகளுக்கு பேச வேறு பேசு பொருள் இல்லாவிட்டால் இவ் வில்பத்துவை கையில் எடுப்பது வழமையாகிவிட்டது.பொது பல சேனா,சிங்கள ராவய இதன் தொடர்வரிசையில் மாத்தறை ஆனந்த ஹிமி தேரர் வந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை 19-12-2015ம் திகதி கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து வில்பத்துவில் சட்டவிரோத குடியேற்றம் நிகழ்ந்துள்ளதாகவும்,அமைச்சர் றிஷாத் போதைப் பொருள் கடத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.இதனைத் தொடர்ந்து அமைச்சர் றிஷாத் தனது வழமையான அதிரடிப் பாணியில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.இதன் பிறகு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் றிஷாத் ஆனந்த ஹிமி தேரர் உண்மையானவராக இருந்தால் தன்னோடு விவாதம் செய்ய வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.இதனை கேள்வியுற்ற நான்கு தொலைக் காட்சிகள் தங்களது தொலைக் காட்சியில் இந் நிகழ்வை ஒளிபரப்ப முன் வந்திருந்தன.இது மக்கள் எதிர்பார்ப்பு கொண்ட நிகழ்வு என்பதை இத் தொலைக் காட்சிகளின் முண்டியடிப்பே போதுமான சான்றாகும்.இதில் ஆனந்த ஹிமி தேரர் ஹிரு தொலைக் காட்சியை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஹிருத் தொலைக் காட்சிக்கும் வில்பத்துவிற்கும் இடையில் நிறையவே தொடர்புள்ளது.கடந்த காலங்களில் இப் பிரச்சினையை ஊதிப் பெருப்பித்து பேரின மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஹிரு தொலைக் காட்சி முக்கிய வகி பாகம் வகித்தது.இவ் ஹிரு தொலைக் காட்சியானது 21-05-2015ம் திகதி சுஜீவா என்ற ஒரு பிரபலமிக்க ஊடகவியலாளரைக் கொண்டு அமைச்சர் றிஷாத்துடன் ஒரு விவாதத்தை நடாத்தி இருந்தது.இவ் விவாதத்தில் அமைச்சர் றிஷாதின் கருத்துக்களின் முன் அவ் ஊடகவியலாளரினால் ஈடு கொடுக்க முடியவில்லை.விவாதத்தின் இறுதில் குறித்த ஊடகவியலாளரால் விவாதிக்க இயலாமல் தனது வினாக்களை வேறு திசை திருப்பி இவ் விடயத்தில் தனது தோல்வியை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருந்தார்.இதில் பேரின ஊடகங்களின் முன் வில்பத்து விடயத்தை ஊதிப் பெருப்பித்த ஹிருத் தொலைக்காட்சியின் போலிக் குற்றச் சாட்டு நிரூபணமானது.

தான் கூறிய ஒரு விடயம் பொய்த்துப் போவதை விட ஒரு ஊடகத்திற்கு வேறு அவமானங்கள் தேவை இல்லை.ஊடகத்தின் மீதான நம்பகத் தன்மை குறைவடையும் போது அந்த ஊடகம் மக்களிடயே செல்லாக் காசாக மாறும் இதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.அப்படியானால் இத் தோல்வியை மறைக்கும் விதமாக ஹிருத் தொலைக் காட்சி தனது அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.ஆனால்,இவ் ஹிருத் தொலைக் காட்சி என்ன செய்தது தெரியுமா? அந் நிகழ்வை அடுத்த நாள் மீள் ஒளிபரப்புச் செய்தது.இதன் மறு வடிவம் “தாங்கள் பொய்யர்கள் என்பதை மக்களே! நம்புங்கள்” என ஹிருத் தொலைக் காட்சியே கூறுவது போன்றாகும்.இவ் நிகழ்வை நன்றாக அவதானிக்கும் போது இவ் நிகழ்வின் பின்னணியில் ஏதோ பாரிய புறக்காரணிகளின் செல்வாக்கு உள்ளதை எடுத்துக் காட்டுகின்றதல்லவா? மேலும்,ஹிருத் தொலைக் காட்சி உரிமையாளருக்கும் அரசியலுக்குமிடையில் நெருங்கிய தொடர்பும் உள்ளது.எனவே,இதன் பின்னணியில் அரசியல் சித்து விளையாட்டுக்கள் உள்ளதா? என்ற அச்சம் எழுகிறது.

முதல் விவாதம் அமைச்சர் றிஷாத்திற்கு சாதகமானது போன்று விளங்கினாலும் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற விவாதத்தில் அமைச்சர் றிஷாதை மண் கௌவச் செய்ய ஹிருத் தொலைக் காட்சி தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததை மறுக்க முடியாது.அதாவது அமைச்சர் றிஷாதை வம்புக்கு இழுத்து அதில் சிலதை சாதிக்க பேரின வாதிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றா என்ற வினாவும் இங்கே எழுகிறது.தற்போதைய சூழ் நிலைகளில் மஹிந்த ராஜ பக்ஸ தனது மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய தேவையுடையவராக இருக்கின்றார்.இதற்கு முஸ்லிம்களே அவருக்கு மிகச் சவாலாக உள்ளனர்.எனவே.இவ் விடயத்தைக் கிளறுவதன் மூலம் சிலதை சாதிக்க மஹிந்த அணி விளையலாம்.இவ் அரசு இவ் விடயத்தில் கரிசனை கொள்ளாத போது முஸ்லிம்களின் அதிருப்தியை சம்பாதிக்கும்.இவ் அரசு இவ் விடயத்தில் முஸ்லிம்களுக்கு சார்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் போது அதில் இனவாதத்தை கிளப்பி தான் நினைத்தவற்றை சாதிக்க வாய்ப்புள்ளது.அதாவது என்ன நடந்தாலும் வெற்றி அவர்கள் பக்கமே உள்ளது.இந்த இன வாத வலை வீச்சில் அமைச்சர் அகப்பட்டுக் கொண்டாரா என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்தப் பிரச்சினை விவாதித்து தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல.அரசின் உயர் மட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு காதும் காதும் வைத்தாப் போல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.சில பிரச்சினைகள் ஊதிப் பெருப்பிக்கும் போது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது வரலாறு.அஷ்ரப் பொன்னம் வெளிக் காணியை முஸ்லிம்களுக்கு வழங்கத் தேவையான அனைத்து அரச அனுமதிகளையும் பெற்றுக் கொண்டார்.இதன் பிறகு இதனை மக்களுக்கு வெளிக் காட்டி அரசியல் இலாபம் தேடும் பொருட்டு அவர் ஒலுவிலில் பாரிய வெற்றி நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.இந்த நிகழ்வுக்கு மக்களை அழைக்கும் பொருட்டு வீர வசனங்கள் பொறிக்கப்பட்ட சுவர் ஒட்டிகள் அம்பாறையின் பல பாகங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.இச் செயலே பேரின வாதிகளிடத்தில் இவ் விடயத்தை கொண்டு சேர்த்தது.இதன் பிறகே இச் செயலைத் தடுக்க பேரின வாதிகள் படை எடுத்தனர்.கடந்த ஜனாதிபதித் தேர்தலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மு.கா கரையோர மாவட்டத்தை பெறும் முயற்சியின் இறுதிக் கட்டத்தை அடைந்தது.இதனை மு.காவின் சில உறுப்பினர்கள் அரசியல் இலாப,முக நூல் பிரபல நோக்கில் வெளிப்படுத்தி இருந்தனர்.இதன் மூலம் இதனை அறிந்து கொண்ட பேரின வாதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து பாராளுமன்றத்தில் கூக்கிரலிட்டு இதனைத் தடுத்திருந்தனர்.எனவே,சில விடயங்களை ஊதிப் பெருப்பிக்கும் போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வரலாறு.இதுவும் அப்படியான ஒரு விடயம் தான்.

இவ் ஆட்சியில் த.தே.கூ சம்பூரில் ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்துள்ளது.இதற்கு த.தே.கூ எந்தத் தேரருடன் விவாதித்தது? தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பற்றி எத்தனையோ இனவாதக் கருத்து மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.எனினும்,த.தே.கூ எந்த சில்லறைகளுடனும் விவாதிக்கச் செல்லவில்லை.யாருடன் மோத வேண்டுமோ அவர்களுடன் தான் அவர்கள் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.அண்மையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி வில்பத்துவில் சட்ட விரோத குடியேற்றம் நடைபெற்றது உண்மைதான் எனக் குறிப்பிட்டிருந்தார்.தேரரை விவாதத்திற்கு அழைத்த அமைச்சர் றிஷாத் ஏன் ஜனாதிபதியை இவ் விடயத்தில் விவாதத்திற்கு அழைக்கவில்லை.இன்றும் பிரதமர் இவ் விடயத்தில் மௌனியாக உள்ளார்.ஏன் இவர் மௌனத்தை கலைக்க அமைச்சர் றிஷாத் முனையவில்லை.2012ம் ஆண்டு முஸ்லிம்கள் வாழ்ந்த சில பகுதிகள் வில்பத்து வனமாக அரச வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட போது அமைச்சர் றிஷாத் மேற்கொண்ட நடவடிக்கை தான் என்ன? தான் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த போது ஏன் இவரால் தனது சொந்த ஊர் மக்களை குடியேற்ற முடியாமல் போனது? இவைகளை வைத்துப் பார்க்கும் போது அமைச்சர் றிஷாத் அரசியல் சக்திகளுக்கு இவ் விடயத்தில் அடிபணிகிறார் மற்றும் அடிபணிந்துள்ளார் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.சில வேளை அமைச்சர் றிஷாத் இவ்வாறான விவாதங்களை மேற்கொள்வது தனது பதவி பட்டங்களைப் பாதுகாத்துக் கொண்டு அரசின் உயர் மட்டத்திற்கு இப் பிரச்சினையை கொண்டு செல்லும் உத்தியாகவும் இருக்கலாம்.

தொடரும்…….

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.