இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அன்ட் சிரியா’ என்ற நோக்கத்தில் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்த ஐ.எஸ். படையினர், ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றி, பரந்து, விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்க திட்டமிட்டிருந்தனர். அவர்களது முதல் இலக்காக இருந்த ஈராக்கில் உள்ள அன்பர் மாகாண தலைநகரான ரமாடி நகரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைப்பற்றினர். அங்கிருந்தவாறே சுற்றுப்பட்டு பகுதிகளையும் ஆக்கிரமிக்க தொடங்கிய தீவிரவாதிகள், ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்ததுடன், அழகான இளம்பெண்களை கடத்திச் சென்று அவர்களை செக்ஸ் அடிமைகளாக மாற்றி சித்ரவதை செய்து வந்தனர்.
இந்நிலையில், ரமாடி நகரை மீண்டும் கைப்பற்றி விட்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கிவிடலாம் என முடிவு செய்த ஈராக், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ரமாடி நகரை சில தினங்களுக்கு முன் கைப்பற்றியது. அடுத்தகட்டமாக, மொசூல் மற்றும் ஹவிஜா நகரைக் கைப்பற்ற மும்முரமாக போர் புரிந்து வரும் ஈராக், நேற்று தெற்குப்பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்து முக்கிய நிலைகளை தவிடுபொடியாக்கியது.