நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று நியூசிலாந்தின் ஆதிக்கத்திற்கு தடைபோட்டது.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இத் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் முக்கியமானதுமான போட்டி நியூசிலாந்தின் நெல்சன் நகரில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் வில்லியம்ஸன் 59 ஓட்டங்களையும் லதெம் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரதீப், சாமிர மற்றும் வெண்டர்ஷே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் 277 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டில்ஷான் 91 ஓட்டங்களையும் குணதிலக்க 65 ஓட்டங்களையும் திரிமன்னே ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும் சந்திமல் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மெக்லன்கன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என முன்னிலைபெற்றுள்ளது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குணதிலக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை டில்சான் இன்றைய போட்டியின் போது படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சனத் ஜயசூரியவினால் 2001 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 1202 எனும் ஓட்டங்களே ஆரம்பத்துடுப்பாட்ட வீரரால் பெறப்பட்ட அதிக ஓட்டங்களாக காணப்பட்டது.
இன்றைய போட்டியில் 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த டில்சான் 24 போட்டிகளில் பங்குபற்றி இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.