இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமனம் !

இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்படவுள்ளார்.
6 (1)

இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் கடந்த 25ம் திகதி இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து அந்தப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. 

குறித்த பதவியைப் பிடிப்பதில் மூத்த இராணுவ அதிகாரிகளுக்குள் பெரும்போட்டி நிலவியது. பனிப்போரும் மூண்டிருந்தது. 

இந்நிலையிலேயே, சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது. 

வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். இது விடயம் பற்றி அவர் படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

இதன்பிரகாரமே மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் பிரதானி என்ற வகையில் இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும், இராணுவத்துக்குள் கடும்போட்டி நிலவுவதால் இறுதிநேரத்தில்கூட முடிவு மாறக்கூடும் என படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இராணுவத் தலைமை அதிகாரி நியமனங்களின்போது, இரண்டு தடவைகள் மேஜர் ஜெனரல் மிலிந்த ஓரங்கட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவசப்படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்துறையில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். வெளிநாடுகளிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். 

அதேவேளை, ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இராணுவத் தலைமையகத்தால் இன்னும் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்படவில்லை என அறியமுடிகின்றது. எனினும், கஜபா படைப்பிரிவு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

இராணுவ சட்டதிட்டத்தின் பிரகாரம் 55 வயது பூர்த்தியானதும் சேவையிலிருந்து ஓய்வுபெற வேண்டும். எனினும், முப்படைத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி நினைத்தால் தரம் உயர்வு வழங்கி அவருக்கான சேவை காலத்தை நீடிக்கமுடியும். 

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரம் உயர்வுடன் தனக்கு இராணுவ சேவையில் பதவி நீடிப்பை வழங்குவார் என்றே ஜகத் டயஸ் பெரிதும் எதிர்பார்த்தார். இராணுவத் தரப்பும் இதனையே எதிர்பார்த்தது. 

எனினும், சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்திற்கொண்டு இதை செய்வதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை என அறியமுடிகின்றது. 

அதேவேளை, இலங்கை இராணுவத்திலுள்ள 46 மேஜர் ஜெனரல்களில் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மைத்திரி டலஸ், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா உட்பட 25 மேஜர் ஜெனரல்கள் 55 வயது பூர்த்தியாகும் நிலையில் அடுத்த வருடம் ஓய்வுபெறவுள்ளனர். 

இதனாலேயே, தற்போது இராணுவத்திலுள்ள மூத்த அதிகாரிகள் சிலருக்குப் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.