பாரிஸ் தாக்குதலில் நேரடி தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் சிரியாவில் நடத்தப்பட்டு வரும் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாக்தாத்தில் இயங்கும் அமெரிக்க ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கலோனல் ஸ்டீவ் வார்ரென் கூறுகையில்:
”சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எல். இயக்கத்தை சேர்ந்த சரப்பே அல் மவுவதன் என்பவர் கடந்த டிசம்பர் 24-ம் தேதி அமெரிக்க படைகள் நடத்திய தொடர் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டான். அவன் பாரிஸ் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அப்தெல் ஹமீத் அபாவுட்டுடன் நேரடி தொடர்புடையவன்.
அவர்கள் மேற்கு நாடுகளில் மேலும் சில தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர்” என்று கூறினார்.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில் உலகையே உலுக்கும் வகையில் நடந்த பாரிஸ் தாக்குதலில் சுமார் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எல். இயக்கத்தினர் மீது சிரியாவில் அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியது.