பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் பலி 23 ஆக உயர்வு: பிரதமர் கடும் கண்டனம்!

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

கைபர் பாக்துன்க்வா மாகாணம் மர்தான் நகரில் தேசிய தரவுத்தள அலுவலகம் உள்ளது. இங்கு அரசுத் துறை சார்ந்த அடையாள அட்டை வேண்டி இன்று ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றான். அவனை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால், தனது மோட்டார் சைக்கிளை நுழைவு வாயிலில் மோதியதுடன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் அவன் வெடிக்கச் செய்துள்ளான். அப்போது அலுவலகத்தின் கதவு, ஜன்னல்கள் நொறுங்கின. இந்த திடீர் தாக்குதலில், வாயில் அருகே நின்றிருந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். 

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பிற்பகல் நிலவரப்படி 12 பேர் பலியாகியிருந்தனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு 22 முதல் 25 வயது வரை இருக்கும் என காவல்துறை துணை ஐ.ஜி. தெரிவித்தார். மேலும், பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், அந்த நபர் அலுவலகத்தினுள் புகுந்து தாக்கியிருந்தால் உயிரிழப்பு இன்னும் அதிகமாகியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

images-2

இந்த தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதே இயக்கம்தான கடந்த ஆண்டு வாகா எல்லையில் தாக்குதல் நடத்தி 60 பேரை கொன்றது குறிப்பிடத்தக்கது.