ஆப்பிரிக்கா நாடான நைஜிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
ராக்கெட் மூலம் கையெறி குண்டுகளை வீசியும், பல்வேறு தற்கொலைப்படை வெடிகுண்டு மூலம் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன.
தாக்குதலுக்கு உட்பட்ட மாய்துகுரி நகரம் போகோ ஹாரம் தீவிரவாதிகளின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது. 2009-ம் ஆண்டு நைஜிரியன் பாதுகாப்பு படையினர் நடத்திய தொடர் நடவடிக்கையில் 700 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு அங்கு தீவிரவாதம் தலைத் தோங்கியது.
நைஜிரிய படைகளை இடைமறித்து 10-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 30 மக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தவாரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டி தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த பல்வேறு தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.