பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ,பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்தல் எனும் தலைப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி இணைப்பாளர் வீ.ரீ.எம்.முபாறக் ஜேபியினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸை இடமாற்றம் செய்யக்கோரி சிலர் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடமையாற்றிய அரசாங்க அதிபர்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் தற்போதைய அரசாங்க அதிபரின் திறமையான செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது.
தனக்குகீழ் கடமையாற்றும் அதிகாரிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு மாவட்டத்தின் நிருவாகத்தை மிகவும் சிறப்பாக நடாத்தி வருவதுடன் மக்களின் அடிப்படைத தேவைகள் அறிந்து அதற்கு உடனடியாக தீர்வுகளைப்பெற்றுக் கொடுக்கும் செயற் திறன் மிக்கவர் அரசாங்க அதிபர் அதனால் இன்று மக்கள் மத்தியில் ஒரு சிறந்த அதிகாரியாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் மத்தியில் மதிப்பிற்குறியவராகவும் இருந்து வருகின்றார்.
அத்தோடு பல்வேறுபட்ட அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி இன வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் விடயங்களில் அனைத்து அரசியல் தலைமைகளையும் தனது சாதுர்யத்தால் கவர்ந்து மாவட்டத்தின் செயற்பாடுகளை செவ்வனே செய்து முடிக்கும் ஒரு சிறந்த அதிகாரி அரசாங்க அதிபர்.
அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளை தனது தன்னலமற்ற பக்கச்சார்பில்லாத செயற்பாடுகள் மூலமாக இல்லாது செய்து இன்று இனங்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் நல்லென்னத்தையும் ஏற்படுத்தி அதனை தொடர்ச்சியாக பேணிப்பாதுகாத்து வருகின்றவர்.
அரசாங்க அதிபர் இன்று அரசியல் ரீதியாக அதிகாரங்களை இழந்த சிலர் தாங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனதால் அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டுவரும் சிறந்த நிருவாக கட்டமைப்பை சீர்குழைத்து தற்போது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு விமர்சனத்தினை ஏற்படுத்துவதற்காகவே இந்த இடமாற்றத்தை செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.
ஆகவே இவரது இடமாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டுவரும் சிறந்த நிருவாக கட்டமைப்பையும் மிக அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட இன ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் என்பதுடன் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தாமதத்தை ஏற்படுத்தும் எனவே நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளையும் விரைவாக செயற்படுத்துவதற்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் நற்பெயருக்கு கலங்கம் இல்லாமல் பாதுகாப்பதற்கும் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிறந்த நிருவாக கட்டமைப்பை பாதுகாப்பதற்கு ஆவன செய்யுமாறு தயவாய் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.