வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக பாஹியங்கம ஆனந்த தேரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
அத்துடன் மன்னார் பிரதேசத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு அமைச்சர் ரிசாத் விடுத்த சவாலுக்கமைய இன்று இரவு பத்து மணி தொடக்கம் தனியார் தொலைக்காட்சியொன்றில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும், மேற்குறித்த ஆனந்த தேரருக்கும் இடையே நேரடி விவாதம் இடம்பெற்றது.
இதன்போது அரச ஆவணங்கள் மற்றும் நில அளவையியல் திணைக்களத்தின் ஆவணங்களை முன்வைத்து வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குல நிலமேனும் காடழிப்பு மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தார்.
இதனையடுத்து குற்றச்சாட்டை மாற்றிய ஆனந்த தேரர், வில்பத்து வனாந்திரத்தை சுற்றிலும் சிங்களக் குடியிருப்புகளே இருந்ததாகவும், வரலாறு காலம் தொட்டு அப்பிரதேசம் சிங்களவர்களுக்கு உரித்தானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும் ஆங்கிலேயர் காலம் தொட்டு தமிழ், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மன்னாரில் வாழ்ந்து வந்திருப்பது குறித்த ஆதாரங்களை அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்வைத்தவுடன் விவாதத்தை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் இனவாத கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர்.
இதனையடுத்து குறித்த தனியார் தொலைக்காட்சியின் முகாமைத்துவத்தை தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் ஆர்.எப். அஷ்ரப் அலீ, பளளுவெவ அபுல்கலாம் ஆசாத், கலாநிதி றியாஸ், உள்ளிட்ட குழுவினர் தங்களது கடுமையான ஆட்சேபணையை தெரிவித்தனர்.
குறித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் நேரடி விவாத நிகழ்ச்சியில் இனியும் ஒரு வார்த்தை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராகவோ, மன்னாரில் அவர்களின் பூர்வீக உரிமைகளுக்கு எதிராகவோ இனவாதக் கருத்துக்களை வெளியிட்டால் நள்ளிரவுக்குள் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் பொதுமக்களால் முற்றுகையிடப்படும் என்றும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும் வில்பத்து விவகாரம் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் தாம் கட்டமைத்த பாரிய பொய்ப் பிரச்சாரத்தை அமைச்சர் தகர்த்தெறிந்தமை தொடர்பாக கடுமையான ஆத்திரத்துடன் ஆனந்த தேரர் தனது இனவாதக் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
அத்துடன் முழுநாட்டினதும் அவதானத்தை ஈர்த்திருந்த ஒரு நேரடி நிகழ்ச்சியில் மன்னார் என்பது சிங்களவர்களுக்கு ஒருபோதும் உரித்தானதாக இருக்கவில்லை என்றும் , அப்பிரதேசம் முழுக்க தமிழ், முஸ்லிம், கிறித்தவர்களின் பாரம்பரிய பூமி என்றும் வலியுறுத்தினார்.
மன்னாரில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மீள்குடியேற இடமின்றி தான் சார்ந்த முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, தமிழ் பேசும் எங்கள் சமூகமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்ற கருத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தனது கருத்துக்களை வலியுறுத்திய அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆர்.எப். அஷ்ரப் அலீ , பளளுவெவ அபுல்கலாம் ஆசாத், கலாநிதி றியாஸ், ஆகியோர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, படையினர் வசமுள்ள தமிழ்மக்களின் காணிகள் விடுவிப்பு விவகாரங்களிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதே துணிச்சலை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.